Ranji Trophy: ரஞ்சி கிரிக்கெட்டில் புதிய வரலாறு! அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்து ரயில்வே புது சாதனை!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அகர்தலாவில் நடைபெற்ற போட்டியில் திரிபுரா – ரயில்வே அணிகள் நேருக்கு நேர் மோதின.

திரிபுரா – ரயில்வே:

இந்த போட்டியில் திரிபுரா முதல் இன்னிங்சில் 52.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஸ்ரீதர் பால் மட்டும் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். 3 வீரர்கள் தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ரயில்வே அணியினர் திரிபுரா பந்துவீச்சில் தடுமாறினர். அந்த அணியின் கோஷ் மட்டும் தனி ஆளாக போராடினார். தொடக்க வீரர் பிரதம் சிங், கோஷ் மட்டுமே அந்த அணியில் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். கோஷ் தனி ஆளாக அணியை மீட்க போராடினாலும் அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், 37.3 ஓவர்களில் 105 ரன்களுக்கு ரயில்வே அணி ஆல் அவுட்டாகியது.

378 ரன்கள் இலக்கு:

இதையடுத்து, திரிபுரா அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்கள் பிக்ரம்குமார், பபுல் தேவ், சீரிதம் பால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து சுதிப் – சதீஷ் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறப்பாக ஆடிய சதீஷ் 62 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுதீப் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 95 ரன்களுக்கு அவுட்டானார். கடைசியில் அபிஜித் 48 ரன்களும், ராணா 47 ரன்களும் எடுக்க திரிபுரா 333 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, 378 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ரயில்வே அணி களமிறங்கியது.

பிரதம் சிங் – முகமது சைஃப்:

அந்த அணியின் தொடக்க வீரர் சுராஜ் 7 ரன்களுக்கும், யுவராஜ் சிங் 2 ரன்களுக்கும், சகாப் 5 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டானர். 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்துக் கொண்டிருந்தது. பிரதம் சிங் – முகமது சைஃப் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். சிறப்பாக ஆடிய பிரதம் சிங் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து முகமது சைஃப்பும் சதம் விளாசினார். முகமது சைஃப்  126 ரன்களுக்கு 14 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பிரதம் சிங் தொடர்ந்து சிறப்பாக ஆடினார். அவர் பவுண்டரிகளாகவும், ஓரிரு ரன்களாகவும் எடுத்து இலக்கை நோக்கி அணியை முன்னேற வைத்தார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த கோஷ் 126 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் உபேந்திரா – பிரதம் சிங் தொடர்ந்து சிறப்பாக ஆடி அணியை இலக்கை நோக்கி முன்னேற வைத்தது. 103 ஓவர்களின் முடிவில் ரயில்வே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலே சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் இதுவே ஆகும். இதற்கு முன்பாக கடந்த 2019ம் ஆண்டு உத்தரபிரதேசம் அணிக்கு எதிராக சவுராஷ்ட்ரா 372 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சேஸிங்காக இருந்தது. ரயில்வே, சவுராஷ்ட்ரா அணிக்கு அடுத்தபடியாக அசாம் அணி 371 ரன்களையும், ராஜஸ்தான் அணி 360 ரன்களையும், உத்தரபிரதேசம் 350 ரன்களையும் சேஸ் செய்ததே அதிகபட்சம் ஆகும்.

Source link