சின்னத்திரை ரசிகர்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சீரியல்கள். அதனால் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தங்களின் வீட்டு சொந்தபந்தங்கள் போல ஏற்று கொள்ளும் அளவுக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமாக சீரியல்களை எடுத்து செல்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
அந்த வகையில் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முதல் சீசன் ஃபேமிலி ஆடியன்ஸ் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறது. முதல் சீசனில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டும் இந்த இரண்டாவது சீசனில் தொடர்ந்து நடிக்கிறார்கள்.
சரண்யா துராடி:
“பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” சீரியல் அதே ஸ்லாட்டில் இரவு 8 மணிக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, வி.ஜே.கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஆகாஷ் பிரேம்குமார், ஹேமா ராஜ் சதீஷ், ஷாலினி, அஜய் ரத்னம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
தற்போது மூத்த மகன் சரவணனுக்கு பெண் பார்க்கும் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. சரவணன் என்ற கதாபாத்திரத்தில் வி.ஜே. கதிர்வேல் கந்தசாமி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற சஸ்பென்ஸ் இருந்து வந்த நிலையில் அதில் நடிகை சரண்யா துராடி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி பின்னர் ப்ரோமோ மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
தங்கமயில்:
தற்போது சரண்யா துராடி என்ட்ரி கொடுக்கும் காட்சிகள் இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் நடிகை சரண்யா துராடி தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இன்று முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தங்க மயிலாக நுழைகிறேன். வேற என்ன கேட்பேன்? எப்போதும் போல உங்கள் அன்பும் ஆதரவும் தந்த என் கண்மணிகளுக்கு மனமார்ந்த நன்றி!” என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த போஸ்ட் மூலம் சரண்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் தங்க மயில் என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையானவர் சரண்யா துராடி. இவர் ஏற்கனவே நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட ஏராளமான தொடர்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இடைப்பட்ட காலத்தில் சீரியல்கள் எதிலும் கமிட்டாகாமல் இருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சரண்யா ஒரு அங்கமாக இணைவதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் காண