Indian Spinner Ashwin Is Back On The Field For The Fourth Day Of The Third Test Against England In Rajkot

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. 
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. அதேபோல், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்த வரை 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 430 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மீண்டும் களமிறங்கிய அஸ்வின்:
முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 500-வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது வீரர் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே, அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில், ராஜ்கோட்டில் இருந்த அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்தாக கூறப்பட்டது. அந்த அழைப்பில், அஸ்வினின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது.
இதனால் அணி நிர்வாகத்திடம் இந்த தகவலைச் சொன்ன அஸ்வின் உடனே ராஜ்கோட்டில் இருந்து வெளியேறினார். அதாவது போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் அஸ்வின் ராஜ் கோட்டில் இருந்து கிளம்பினார். இந்நிலையில் பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், அஸ்வின் இன்று அதாவது போட்டியின் நான்காவது நாளில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று கூறியிருந்தது. அதன்படி, அவர் இன்று மீண்டும் களமிறங்கினார்.
ரசிகர்கள் உற்சாகம்:
இச்சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்துகொண்டார். அதன்படி, தான் வீசிய முதல் ஓவரையே மெய்டன் செய்தார். இந்த போட்டியில் 6 ஓவர்கள் வீசிய அஸ்வின் 3 ஓவர்களை மெய்டன் செய்து 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதில் தன்னுடைய பங்கிற்கு ஒரு விக்கெட்டை எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 500 Test Wickets: அதிவேக 500 விக்கெட்! முரளிதரனுக்கு அடுத்து நம்ம அஸ்வின்தான் – பட்டியலை பாருங்க!
 
மேலும் படிக்க: IND VS ENG 3rd Test 1st Innings: ரோஹித், ஜடேஜா சதம்; சர்ஃப்ராஸ்கான் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா

Source link