Lok Sabha Election 2024 The Voices Of The Coalition Leaders Echoed In The Salem BJP General Meeting – TNN

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்‌ பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி. இன்று காலைதான் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த்து. கடந்த 10 ஆண்டுகாலமாக பாமக தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. நாட்டின் நலன் கருதி நாங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் 57  ஆண்டுகாலம் இரண்டு கட்சிகள் ஆட்சி செய்து வருகிறார்கள். மாற்றத்தை எதிர்நோக்கம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மகிழ்ச்சியில் இணைந்து இருக்கிறோம். டெல்லி அரசியல் முழுமையாக அறிந்துள்ளேன். முன்பெல்லாம் மோடிக்கு முன்பாக 90 விழுக்காடு லாபியிஸ்ட் 10 சதவீதம் அரசியல்வாதிகள் இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. லாபியிஸ்ட் எனும் உயர்ரக தரகர்களை மோடி ஒழித்து விட்டார். நான் விளையாட்டில் ஆர்வம் கொண்டவன். சேலத்தில் தான் படித்தேன். மோடி வந்த பிறகு இன்றைக்கு உலக அளவில் இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றது. விளையாட்டுத் துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபிசி சமுதாயத்தினருக்கு பிரதமர் மோடி நிறைய செய்திருக்கிறார். மிகவும பின்தங்கிய இடத்தில் இருந்து வந்திருக்கும் பிரதமர் மோடி இன்னும் நிறைய செய்ய வேண்டும். இதே போன்று டாக்டர் ராமதாஸூம் மிகவும்பின்தங்கிய இடத்தில் இருந்து வந்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று கூறினார்.

முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:
இந்தியாவை கடந்த 10 ஆண்டுகாலமாக ஒரு தலைசிறந்த முறையில் பிரதமர் மோடி ஆட்சி செய்துள்ளார். ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சியை, வேறு எந்த பிரதமரும் ஆட்சி செய்யாத வகையில் மோடி செயல்பட்டுள்ளார். சிறப்பான நிர்வாகத்தை தந்த ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். கடந்த காலங்களில் ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களுக்கு மத்திய அரசு நிதி தாராளமாக கிடைக்கச் செய்த ஒரே பிரதமராக மோடி உள்ளார். ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்க வேண்டியது மிகவும் சிரமத்திற்குரியது. ஆனால், மோடி ஆட்சிக்காலத்தில் ஒரே அரசாணையில் 11 மருத்துவக் கல்லூரி தந்த ஒரே பிரதமர் மோடி மட்டும்தான் என்றார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நிச்சயம் பிரதமராவார். அதற்காக தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிச்சயம் பணியாற்றுவோம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற இன்னும் ஒரு மாதம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர்:
வரலாற்று சிறப்புமிக்க சேலத்தில் மாநாடு நடக்கிறது. சேலம் என்னுடைய சொந்த மண். 2014 முதல் பிரதமர் மோடியும் நானும் 10 மேடைகளில் பேசியுள்ளோம். உழைப்பாளிகள் வாழ்கிற இந்த சேலத்தில் மரியாதையை என்றும் விட்டுவிடாத சேலத்தில் நடக்கிற மாநாடு பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. மக்கள் முன்னால் நிற்பது பெருமையாக இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் மாற்றம் வருமா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த மாற்றம் தமிழ்நாட்டிற்குத்தான் தேவை. மத்திய அரசுக்கு இல்லை. 10 ஆண்டுகளில் செய்த திட்டங்களால் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு இந்தியா உலக பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறது. 2024- தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்த 40 எம்பிக்களை அனுப்ப வேண்டும். இதனால்தான் அவர் பிரதமர் ஆக வேண்டும் என்பது இல்லை. ஆனால் நம்முடைய சார்பில் எம்பிக்கள் போகும் போது திட்டங்களை கேட்டுப் பெற முடியும்.கடந்த 5 ஆண்டுகளில பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் திமுக எம்பிக்கள் சிறுபிள்ளைகள் போல கூச்சல் போட்டு தடுக்கிறார்கள். ஒரு நாள் பாராளுமன்றம் நடைபெற மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் வீணாகிறது. நமக்கு திட்டங்கள் வரவிடாமல் தடுத்த்து திமுக எம்பிக்கள்தான். தமிழ்நாடு மேலும் உயர, வேலைவாய்ப்பு கிடைக்க மத்திய அரசுடன் ஒத்துப் போக வேண்டும். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாநில அரசு எதிர்ப்பதுதான் எங்கள் வேலை என்பது போல செயல்படுகிறது. திமுக எம்பிக்கள் ஊடக வெளிச்சத்திற்காக செயல்படுகிறார்கள். தாமரைக்கு மட்டுமே ஓட்டுப் போட வேண்டும். இல்லையெனில் குப்பைக்கு ஓட்டு போடலாம்.
புதிய நீதி கட்சி ஏ.சி. சண்முகம்:
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு என்ன கொடுத்தார் என்று கேள்வி கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ரூ.900 கோடி மானியமாக கொடுத்து இருக்கிறார். 72 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் என்ன செய்ய போகிறார்கள் என இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Source link