‘Huge Rally With INDIA Alliance Leaders At Closing Of Rahul Gandhi’s Nyay Yatra In Mumbai With Cm Stalin | Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா – மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

Lok Sabha Election 2024: மும்பையில் இன்று நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்துடன், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முடிவடைய உள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022ம் ஆண்டு, தெற்கே கன்னியாகுமரியில் தொடங்கி,  வடக்கே ஜம்மு காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களை சந்தித்தார். அதைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரில் இருந்து மும்பையை நோக்கி, பாரத ஒற்றுமை நீதி யாத்திரை என்ற நடைபயணத்தை தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  பாஜக ஆளும் மாநிலங்கள் வழியான அவரது பயணத்தின் போது, சில இடங்களில் எதிர்ப்புகளும் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது.
I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம்:
இந்நிலையில்,  ராகுல் காந்தியில் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை பயணம் இன்றுடன் முடிவடைகிறது. அதையொட்டி, மும்பையில் I.N.D.I.A. கூட்டணி தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்த ராகுல் காந்தி, நேற்று இரவு 8 மணியளவில் அம்பேத்கர் சமாதியான சைத்யபூமியில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து, இன்று மணி பவன் முதல் ஆகஸ்டு கிராந்தி மைதானம் வரை ராகுல் காந்தி நடைபயணம் செல்கிறார். அங்கு, ராகுல் காந்தியின் யாத்திரையின் முடிவாக, நடைபெறும் பொதுக்கூட்டத்தில் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் பொதுக்கூட்டம் I.N.D.I.A. கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 
முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிரா, பீகார்:
48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாகவு, 40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் 7 கட்டங்களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணிக்கு 80 எம். பி. க்களை இந்த மாநிலங்கள் அள்ளிக் கொடுத்தன. ஆனால், தற்போது இந்த மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு ஒரு எதிர்ப்பு மனநிலை நிலவுவதால், அதனை தங்களுக்கு சாதகமாக அறுவடை செய்ய I.N.D.I.A. கூட்டணி முயல்கிறது. இதற்கு இன்றைய பொதுக்கூட்டம் பெரிதும் உதவும் என இந்த கூட்டணி தலைவர்கள் நம்புகின்றனர்.

Source link