farmers protest continues in delhi fourth round talk with central govt will happen today


Farmers Protest: தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு, தற்போது அரசாங்கத்தின் மீது உள்ளது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம்:
குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது போன்ற, ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் பேரணியாக செல்லும் நோக்கில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு குழுக்களாக டெல்லியை நோக்கி படையெடுத்துள்ளனர். ஆனால், டெல்லி எல்லைப்பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகள் உள்ளே வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இருதரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலால் விவசாயிகள் குவிந்துள்ள பகுதிகளில் பதற்றமுடனே காணப்படுகிறது.
நான்காம் கட்ட பேச்சுவார்த்தை:
விவசாய அமைப்புகள் மற்றும் மத்திய அரசு இடையே ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், இதுவரை சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஏற்கனவே வழங்கிய உத்திரவாதங்களை மட்டுமே நிறைவேற்றக் கோருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், விவசாயத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான, நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
விவசாயிகள் கோரிக்கை:
பஞ்சாப் – ஹரியானா எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் பாந்தர், “மத்திய அரசு விரும்பினால், ஒரே இரவில் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வரலாம். அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண விரும்பினால், குறைந்தபட்ச ஆதார விலை (MSP) தொடர்பாக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். MSP இன் சட்டப்பூர்வ உத்தரவாதம் இன்னும் போராட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. MSP மற்றும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடிக்கு உத்தரவாதம் அளிக்கும் அவசரச் சட்டத்தை பரிசீலிப்பதன் மூலம் பிரதமர் மோடி தீர்க்கமான தலைமையை வெளிப்படுத்துவார்.  விவசாயிகள் இயக்கங்கள் தங்களது தீர்மானத்தில் உறுதியாக உள்ளன.  அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் நேர்மறையான முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.  அதே நேரத்தில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என உறுதிபட பேசினார்.
இணையசேவை துண்டிப்பு:
போராட்டத்தை அடுத்து, ஹரியானா மாநில அரசு அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய ஏழு மாவட்டங்களில் மொபைல் இணையம் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் சேவைகளுக்கான தடையை பிப்ரவரி 19 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனிடையே, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு மற்றும் கானௌரி பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் முகாமிட்டுள்ளனர்.  ஹரியானாவைச் சேர்ந்த குர்னாம் சிங் சாருனி தலைமையிலான பிரிவினர் குருக்ஷேத்ரா, யமுனாநகர் மற்றும் சிர்சாவில் பல இடங்களில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தினர். 150க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் காண

Source link