Prime Minister Narendra Modi Will Fly To 3 States In One Day Tamilnadu Maharastra Karnataka

PM Modi Visit Schedule: ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு பிரதமர் பயணம் செய்கிறார். சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ(Khelo India Youth Games) பிரதமர் தொடங்கி வைக்கிறார்
புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ்(DD Tamil) என்ற பெயரில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.நாட்டில் ஒளிபரப்புத் துறையை வலுப்படுத்த ரூ.250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19 அன்று தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.45 மணியளவில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:45 மணியளவில், கர்நாடகாவின் பெங்களூருவில் போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்கும் பிரதமர், போயிங் சுகன்யா திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 இன்  தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
சோலாப்பூரில் பிரதமர்
சோலாப்பூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மகாராஷ்டிராவில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 8 அம்ருத் (புத்தாக்கம்  மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம்) திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
மகாராஷ்டிராவில் பிரதமரின்  நகர்ப்புற வீட்டு வசதித்  திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 90,000-க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மேலும், சோலாப்பூரில் உள்ள ரேநகர் வீட்டுவசதி சங்கத்தின் 15,000 வீடுகளையும் அவர் அர்ப்பணிப்பார், இதன் பயனாளிகளில் ஆயிரக்கணக்கான கைத்தறி தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள்,  பீடி தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோர் அடங்குவர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் போது மகாராஷ்டிராவில் பிரதமரின் ஸ்வநிதித்  திட்டத்தின் 10,000 பயனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணைகளை விநியோகிக்கும் பணியை பிரதமர் தொடங்கி வைப்பார்.
பெங்களூரில் பிரதமர்
பெங்களூருவில் புதிய அதிநவீன போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திறந்து வைப்பார். 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட 43 ஏக்கர் வளாகம், அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். நாட்டின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிக அளவில் பெண் குழந்தைகள் நுழைவதற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டம் இந்தியா முழுவதிலுமிருந்து பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில்  (ஸ்டெம்) முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் வேலைகளுக்கு பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்புகளை வழங்கும். இளம் பெண்களுக்கு, இந்தத் திட்டம் ஸ்டெம் தொழில்களில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வகையில் 150 திட்டமிடப்பட்ட இடங்களில் ஸ்டெம் ஆய்வகங்களை உருவாக்கும். இந்தத் திட்டம், விமானிகளாகப் பயிற்சி பெறும் பெண்களுக்கு உதவித்தொகையையும் வழங்கும்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-இல் பிரதமர்
அடிமட்ட அளவில் விளையாட்டு மேம்பாட்டை ஊக்குவிப்பதிலும், வளர்ந்து வரும் விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதிலும் பிரதமரின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு வழிவகுத்தது. சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்  2023-இன்  தொடக்க விழாவில் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். தென்னிந்தியாவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் 2024 ஜனவரி 19  முதல் 31  வரை நடைபெறும்.
இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னம் வீர மங்கையாகும். வீர மங்கை என்று அன்பாக அழைக்கப்படும் ராணி வேலு நாச்சியார்,  ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்த ஒரு இந்திய ராணி ஆவார். பெண்கள் சக்தியின் வலிமையை உள்ளடக்கிய இந்த சின்னம், இந்தியப் பெண்களின் வீரம் மற்றும் உணர்வை அடையாளப்படுத்துகிறது. விளையாட்டுப் போட்டிகளின்  அடையாளச் சின்னத்தில் திருவள்ளுவரின் உருவம் இடம்பெற்றுள்ளது.
26 விளையாட்டுப் பிரிவுகள், 275-க்கும் மேற்பட்ட போட்டி நிகழ்வுகள் மற்றும் 1 டெமோ விளையாட்டு ஆகியவற்றுடன் 15 இடங்களில் 13 நாட்கள் நடைபெறும் இந்தக் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் பதிப்பில் 5600 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். 26 விளையாட்டுப் பிரிவுகள் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து போன்ற வழக்கமான விளையாட்டுகளுடன் களரிப்பயட்டு, கட்கா, தாங்டா, கபடி மற்றும் யோகாசனம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளின் கலவையாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்  வரலாற்றில் முதல் முறையாக டெமோ விளையாட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
தொடக்க விழாவின் போது, சுமார் ரூ .250 கோடி மதிப்பிலான ஒளிபரப்புத் துறை  தொடர்பான திட்டங்களுக்கு  பிரதமர்  அடிக்கல் நாட்டுவார். புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் தொடங்குவது; 8 மாநிலங்களில் 12 ஆகாஷவாணி பண்பலை நிகழ்ச்சிகள்; மற்றும் ஜம்மு காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் டிரான்ஸ்மிட்டர்கள்  உள்ளிட்டவை இதில் அடங்கும்.  மேலும், 12 மாநிலங்களில் 26 புதிய பண்பலை ஒலிபரப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

Source link