இன்றைய தினம் சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி. அனைத்து சிவ தலங்களிலும் சிவபெருமானுக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதை பார்ப்பதற்கு பக்தகோடிகள் அனைவரும் கண்விழித்து சிவபெருமானை ஆராதிப்பார்கள். ஒரு சில அன்றைய தினம் இரவு கண்முழிக்க வேண்டும் என்பதற்காக கச்சேரி, நாட்டியம், இசை என பல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலர் சிவனின் பெருமைகளை போற்றக்கூடிய படங்களை கண்டு பரவசமடைவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில சிவபக்தி படங்களை பற்றி இன்றைய தினத்தில் பார்க்கலாம் :
திருவிளையாடல் :
ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் 1965ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் திரைப்படம் சிவனின் மகிமையை பெருமையை பறைசாற்றிய திரைப்படம்.
சரஸ்வதி சபதம் :
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1966ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகவும் பிரபலமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் ஒரு திரைப்படம்.
திருவருட்செல்வர் :
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1967ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, ஆர்.முத்துராமன், பத்மினி, நாகேஷ், மனோரமா என ஏராளமானோரின் நடிப்பில் உருவான இப்படம் சிவனின் பெருமைகளை போற்றியது.
சிவன் மகிமை :
கிரிதர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உன்சூர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவன் மகிமை’. சீனிவாச மூர்த்தி, பத்மப்பிரியா, மைசூர் லோகேஷ், ஸ்ரீநாத், ஸ்ரீலதா, ராஜனந்த், டிஸ்கிரி நாகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். சிவபெருமானின் மகிமையை போற்றும் இப்படம் சிவராத்திரி கண்டுகளிக்க உகந்த திரைப்படம்.
சிவலீலை :
விஎஸ்என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வி.சுவாமிநாதன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான சிவலீலை படத்தில் கே.ஆர்.விஜயா, சித்தாரா, கல்யாண்குமார், சீனிவாச மூர்த்தி, கவிதா, சுதர்ஷன் மற்றும் பலர் நடித்திருந்தனர். டி.ஜி.லிங்கப்பா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
சக்திலீலை :
டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, ஜெயலலிதா, கே.ஆர். விஜயா, மஞ்சுளா, சிவகுமார், சுந்தர்ராஜன், அசோகன், மனோரமா மற்றும் ஏராளமானோர் நடிப்பில் மல்டி- ஸ்டாரர் புராணப் படமாக 1972ம் ஆண்டு வெளியானது.
இப்படி ஏராளமான பக்தி திரைப்படங்கள் சிவபெருமானின் மகிமைகள், அதிசயங்களை உணர்த்தும் வகையில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. காலத்தால் அழியாத இப்படங்கள் வரும் தலைமுறையினருக்கும் சிவ பக்தியை பறைசாற்றும் படங்களாக அமைந்தன. சிவராத்திரி தினமான இன்று இந்த சிவ பக்தி படங்களை கண்டு ரசித்து சிவனின் பரிபூரணமான அருளை பெறுங்கள்.
மேலும் காண