தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது அஜித் தனது 62ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க பிக்பாஸ் புகழ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் கிங் அர்ஜூன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அஜர்பைஜானில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக லொகேஷனை தேர்வு செய்து வருகிறார்கள் என கூறப்பட்டது. பெரிதாக படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. முதலில் இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதை மீது பெரிய ஈடுபாடு இல்லாததால் அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பந்தமானார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனிடையே நடிகர் அஜித் அவ்வப்போது பைக் டூர் சென்று வரும் நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அஜித்தின் குட் பேட் அக்லி எனும் அடுத்த படத்துக்கான அப்டேட்டும் முன்னதாக வெளியானது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் மீதியுள்ள படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் தொடர்ச்சியாக முடிக்க முடிவெடுத்துள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
மேலும் காண