இங்கிலாந்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் வந்துள்ளது போன்று, இந்தியாவிலும் 2029ல் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரகால சட்டங்கள் முளைத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். யாராவது தங்களது கருத்துகளை கூறினால், அவர்கள் மீது தாக்குதல் என பாசிச ஆட்சி நடந்து வருவதாக குற்றம் சாட்டினார்.
முழுமையான மோடி ஆட்சி என்பது போய் என்ற செல்வபெருந்தகை, கூட்டணி ஆட்சி என மக்கள் தீர்ப்பளித்திருப்பதாக கூறினார். தொடர்ந்து வெறுப்பு அரசியலை பாஜக அரசு செய்து வருவதாகவும், தேர்தல் முடிவுக்குப் பிறகும் அவர்கள் திருந்தவில்லை என்றும் விமர்சித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 400க்கும் மேல் வெற்றி என்று பாஜகவினர் பேசியதாகவும், ஆனால், தற்போது நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு தயவு இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாத நிலையை மக்கள் தந்துள்ளதாகவும் கூறினார். எதிர்க்கட்சியாக இருக்கும் தங்களுடைய தலைவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவினர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
அதனால்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக கடமையாற்றி வரும் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு, பதில் சொல்ல முடியாமல் ஆளும் கட்சியினர் திணறுவதாக விமர்சித்தார்
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆவதாக தெரிவித்த செல்வபெருந்தகை, இப்போது, அந்த கட்சி விஸ்வரூபம் எடுத்து 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று இருப்பதாக கூறினார். இதே போன்று, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2029ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் வந்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், அதற்கான முயற்சிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.