சென்னையில் எண்ணெய் கழிவுகள் விவகாரத்தில் அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா?
உரிய பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதனை விட்டுவிட்டு, எவ்வித பாதுகாப்புக் கருவிகளும் கொடுக்காமல் மீனவ மக்களை ஈடுபடுத்துவதென்பது ஒரு நல்ல ஆட்சிக்கு அழகல்ல என்பதனைத் தாண்டி அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
“எங்களுக்கு இந்தக் கைகளால்தானே வாக்களித்தீர்கள்”, என்று தன் ஆட்சியின் கீழுள்ள ஏழை எளிய மக்களின் அதே கைகளுக்கு, திமுகவின் தண்டனை அளிக்கும் செயலா இது? என்று கேட்கத் தோன்றுகிறது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு வகையில் பேசியும், களத்தில் அதற்கு மாறாகவும் ஈடுபட்டு வரும் CPCL நிறுவனமும், அதனை சரிவர கவனிக்காத தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமும் தான் தண்டனைக்கு ஆளாக வேண்டுமேயொழிய, ஏற்கனவே பெருமழையினாலும் எண்ணெய்க் கசிவினாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவப் பெருங்குடி மக்களல்ல.
இந்தக் கொடிய செயலினை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும். பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தவேண்டும். மேலும், இதுவரை இந்த அபாயகரமானச் செயலில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், துயர் துடைப்பு உதவிகளும் தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்.
CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா?
உரிய பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை…
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) December 15, 2023
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.