இன்னும் தனக்கு சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமம் இருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி , மிருணாளினி ரவி நடித்துள்ள ரோமியோ படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளராக ரசிகர்களைக் கவர்ந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். இதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், ஷைத்தான், உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
விபத்தில் படுகாயமடைந்த விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் லங்காவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பின்போது கப்பலில் ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனி படுகாயமடைந்தார். கப்பல் விபத்திற்கு உள்ளான நிலையில், தண்ணீரில் விழுந்து மயக்கம்டைந்தார் விஜய் ஆண்டனி. இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மீட்டு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பின் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்தார்.
நாம எல்லாரும் கஷ்டம்தான் படுறோம்
விபத்தில் படுகாயம் , மகளின் தற்கொலை என அடுத்தடுத்த அதிர்ச்சிகளை சந்தித்து வந்தார் விஜய் ஆண்டனி. இன்று கோயம்புத்தூரில் ரோமியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய் ஆண்டனி. அப்போது அவரிடம் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி “ கஷ்டம் என்பது நம்ம எல்லாருக்கும் தான் இருக்கும் . நம்ம எல்லாரும் தன்னோட கனவுகளுக்காக ஆசைக்காக ஓடிக்கொண்டுதான் இருக்கோம் . நம்ம ஓடும்போது எல்லாமே சுமுகமாக அமைவது இல்லை. நீங்கள் சந்திக்கும் அதே கஷ்டத்தை தான் நானும் சந்திக்கிறேன்” என்று அவர் கூறினார்.
முகத்தில் இன்னும் ஆறு பிளேட் இருக்கு
தனக்கு ஏற்பட்ட விபத்தை எப்படி எதிர்கொண்டார் என்று கேள்வி எழுப்பப் பட்டபோது “விபத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. என் முகத்தில் இன்னும் கூட ஐந்து ஆறு பிளேட் இருக்கு. நான் பேசுவதை நன்றாக கவனித்தால் ஒரு சில வார்த்தைகளை உச்சரிப்பதற்கு நான் சிரமப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் விபத்தில் இருந்து குணமடைந்து வந்த பின் இப்போது நான் கொஞ்சம் பாசிட்டிவாக இருக்கிறேன்” என்று விஜய் ஆண்டனி கூறினார்.
மேலும் காண