Eri Katha Ramar Temple: சீதையின் கரம்பிடித்த ராமர்..! ஏரி காத்த ராமர் கோயில் சிறப்புகள் !

ஏரி காத்த ராமர் ( Eri Katha Ramar Temple )
செங்கல்பட்டு (Chengalpattu News) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்த பெற்ற கோவில் “ஏரி காத்த ராமர் கோவில் ” கோவிலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா?. மதுராந்தகத்தில் இருக்கும் இந்த ராமர், கலியுகத்திலும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இக்கோவிலில் வேண்டியது கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
கோவிலின் தல வரலாறு என்ன சொல்கிறது ?
ராமபிரானின் மனைவி சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றதை நாம் அனைவரும் அறிவோம். சீதையை மீட்க ராமபிரான் சென்ற பொழுது, சிறிது நாட்கள் விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அங்கு விபண்டக முனிவரின் உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார். விபண்டக முனிவரின் வேண்டுதல்படி, இலங்கையில் இருந்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். இந்த புராண சரித்திரத்தை நிகழ்வை குறிக்கும் வகையில், விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. இந்த கதையின் அடிப்படையில் இங்கு, புஷ்பக விமானத்துடன், கோதண்ட ராமர் கோவில் கட்டப்பட்டது.

சீதையின் கரம் பிடித்த ராமர்
இக்கோயிலில் ராமபிரான் சீதையை கைகளைப் பற்றிய நிலையில், காட்சியளிப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும். புதியதாக திருமணமான தம்பதியர் இக்கோவிலுக்கு வந்து ராமர் மற்றும் சீதையை வழிபட்டு சென்றால், இருவருக்கிடையே அன்பு நிலைத்து நிற்கும் என நம்பப்படுகிறது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சண்டை மற்றும் சச்சரிவுகள் இருப்பவர்களும், இக்கோவிலில் வழிபாடு நடத்தினால், இருவர் மனதும் ஒன்றிணையும் என நம்பப்படுகிறது. 
ஏரி காத்த ராமர் கோவில்
மதுராந்தகம் பெரிய ஏரி இந்த கோவில் பின்புறம் அமைந்துள்ளது. அவ்வப்பொழுது மதுராந்தகம் ஏரி தண்ணீர் வெளியேறியதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்தியாவை ஆங்கிலோர் ஆட்சி செய்திருந்தபொழுது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் இருந்தார்.
மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஏரிக்கரையை பலப்படுத்த அவர் எடுத்த முயற்சி பலன் அளிக்காமல் இருந்து வந்துள்ளது. ஏரியை ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம், கோவிலை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிலர் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் கோபமாக “இந்த ஏரிக்கரையை உங்க சாமி காப்பாற்றுகிறதா என பார்ப்போம் அப்படி செய்தால் நான் திருப்பணி செய்து தருகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்து ஏரி வேகமாக நிரம்பியுள்ளது.
ஏரியைப் பார்வையிட ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் அங்கு சென்றிருந்த பொழுது, இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி நின்றனர். பெரு மழையிலும் ஏரிக்கரை உடையாமல் இருந்து உள்ளது என சொல்லப்படுகிறது. மகிழ்ந்த லயோனல் பிளேஸ், தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, ஏரி காத்த ராமர் என்ற பெயர் ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது

Source link