Actor Vijay Not Attended Vettaikaran Movie Director Babu Sivan Funeral Assistant Director Anna Muthuvel


இயக்குநர் பாபு சிவன் மறைந்தபோது அவருக்கு வாய்ப்பு வழங்கிய நடிகர் விஜய் கூட வரவில்லை என துணை இயக்குநர் அண்ணா முத்துவேல் வேதனை தெரிவித்துள்ளார். 
வேட்டைக்காரன் படம் 
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யின் 49வது படமாக ‘வேட்டைக்காரன்’ வெளியானது. மறைந்த இயக்குநர் பாபுசிவன் இயக்கிய இப்படத்தில் அனுஷ்கா, சலீம் கௌஸ், சத்யன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இதனிடையே பாபுசிவன் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
விஜய் கூட வரவில்லை
இந்நிலையில் திரைப்பட துணை இயக்குநர் அண்ணா முத்துவேல் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், “தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற இயக்குநர்களை மட்டும் தான் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள். ஆனால் எவ்வளவு திறமை இருந்தாலும் தோல்வியுற்ற இயக்குநர்களை திரும்பி பார்க்க மாட்டார்கள் என்பதற்கு என்னுடைய நண்பன் மறைந்த இயக்குநர் பாபு சிவன் நல்ல எடுத்துக்காட்டு. சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். அவருடன் இன்னொரு நண்பனும் வந்து சேர்ந்தான். 

அவன் தான் ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’ படத்தை இயக்கிய பி.வி.ரவி. அவனும் இப்ப உயிரோட இல்ல. நான், பாபுசிவன், மூர்த்தி ஆகிய 3 பேரும் ஒரே ரூமில் வசித்தவர்கள்.சினிமா வாய்ப்புக்காக அந்த காலக்கட்டத்தில் எல்லா இடங்களிலும் ஏறி இறங்கி உதவி இயக்குநராக வாய்ப்பு தேடினோம். எங்களில் பாபு சிவன் விஜய்யை வைத்து நரசிம்மா படம் எடுத்த திருப்பதி சாமியிடம் உதவி இயக்குநராக வேலை செய்தார். அவர் இறந்த பின்பு தவசி படம் எடுத்த உதய ஷங்கரிடம் சேர்ந்தான். 
பின்னர் இயக்குநர் தரணி மற்றும் பரதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவர்கள் இருவரும் விஜய்யை வைத்து படம் எடுத்தார்கள். தில், தூள், கில்லி என தரணி படங்களில் எல்லாம் வேலை செய்ததால் குருவி படத்தில் வசனக்கர்த்தாவாக பணியமர்த்தப்பட்டார். அப்போது விஜய்யுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் அவரிடம் ஒரு கதையை பாபுசிவன் சொன்னான். அதுதான் வேட்டைக்காரன். 
அந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் நீண்ட நாட்களாக ஓடவில்லை. என்ன காரணம் என தெரியவில்லை. வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. விஜய் ரசிகர்கள் வேட்டைக்காரன் படத்தை கொண்டாடினார். 
ஆனால் அந்த படத்துக்குப் பின் பாபுசிவனுக்கு எந்த படமும் அமையவில்லை. விஷால், அர்ஜூன் என எல்லாரிடமும் கதை சொன்னான். தெலுங்கில் கூட முயற்சி செய்தும் எதுவும் அவனுக்கு கைகூடவில்லை. பாபுசிவனால் அதனை ஏற்றுக் கொள்ளக்கூட முடியவில்லை. அவருக்கு கல்லூரியில் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒருநாள் நண்பர் மூர்த்தி பாபுசிவனுக்கு உடல்நிலை சரியில்லை என அழைக்க ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவனை காணச் சென்றேன். 
என்னவென்று விசாரிக்கையில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக சொன்னார்கள். ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தான். எத்தனையோ நடிகர்களுடன் பணியாற்றியுள்ளான். எத்தனையோ பேருக்கு வேலை கொடுத்துள்ளான். ஆனால் யாரும் வந்து பார்க்கவே இல்லை. குறிப்பாக நடிகர் விக்ரம், விஜய் கூட வந்து பார்க்கவே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை என அண்ணா முத்துவேல் தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link