Tamilisai Soundararajan Said That The Prime Minister And The Central Government Have A Role In Bringing Global Investors To Tamil Nadu | ’உலக முதலீட்டாளர்கள் தமிழகம் வருவதில் பிரதமருக்கும் பங்கு உள்ளது’

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. பிரதமர் மோடி பல வெளிநாடுகளுக்கு சென்று ஏற்படுத்திய நல்லுறவு ஏற்படுத்தியுள்ளார். அதனால் பாரத தேசம் தொழில் முனைவோருக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நல்லெண்ணம் ஏற்படுத்தியதே இதற்கு காரணம். முந்தைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு தொழில்முனைவோர்கள் கிடைத்ததார்கள்? எந்தெந்த நாடுகள் தொழிற்சாலைகள் ஆரம்பித்தது? என்ன பயன் என்ற விபரம் முழுமையாக தெரியவில்லை. மாநாடு நடத்துவது பெரிது அல்ல. எந்த அளவிற்கு வெற்றிகரமாக நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். முதலமைச்சர் சில தொழிற்சாலைகள் தெற்கு பகுதிக்கும் வருகிறது என சொல்லியுள்ளார். அது எல்லா பகுதிகளுக்கும் கிடைக்கும்படி பார்க்க வேண்டும்.
நாட்டின் மீது நம்பிக்கை இருப்பதால் தான் உலக முதலீட்டாளர்கள் வருகிறார்கள். மாநிலத்தை மட்டும் வைத்து தொழில் துவங்க தொழில் முனைவோர்கள் வருவதில்லை. தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்கள் அந்நிய முதலீட்டை ஈர்த்து வருகின்றன. இதில் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை, மின்கட்டண உயர்வு, மழை வெள்ள பாதிப்புகள் என பல பிரச்சனைகள் இருக்கின்றன. தொழிற்சாலைகள் ஆரம்பிக்க அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
சென்னைக்கு அருகே ஒரு பேருந்து நிலையத்தை திறந்துள்ளார்கள். பிரதமர் திருச்சியில் விமான நிலையம் திறந்ததால் என்ன பிரயோஜனம் எனக் கேட்டார்கள். ஆனால் பேருந்து நிலையம் பாதி திறந்தும், திறக்காமல் இருப்பதால் மக்கள் அவதியடைக்கிறார்கள். எல்லா திட்டங்களையும் முழுமையாக முடிக்காமல் திறக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு அருகாமையில் கொண்டு வரும் திட்டத்தை தான், மக்களுடன் முதல்வர் திட்டம் என முதல்வர் கோவையில் ஆரம்பித்து வைத்தார். மத்திய அரசின் அடிப்படை கொள்கை சார்ந்த திட்டங்களை பார்த்து, பெயர் மட்டும் ஈர்ப்பு தன்மையுடன் வைத்து தமிழக அரசு கொண்டு வருகிறது.
கூடலூரில் சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழந்தது வருத்தமான ஒன்று. வனத்துறை இன்னும் கவனமாக இருக்க வேண்டும். மனிதாபிமானத்தோடு மிருகங்களையும், மனிதர்களையும் பாதுகாக்க வேண்டும். முரசொலியில் பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகளை பார்க்க வரவில்லை என கட்டுரை வந்தது. ஆனால் வெள்ள பாதிப்புகளை முழுமையாக பார்க்க முதலமைச்சரே செல்லவில்லை. தமிழக அரசு விளம்பர விழாக்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. 11 மாவட்டங்களில் மழை வெள்ள எச்சரிக்கை வந்துள்ளது. ஆனால் முன்னேற்பாடுகள் செய்யாமல், மழை பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசின் மீது பழி போடலாம் என்ற எண்ணம் தமிழக அரசிடம் உள்ளது. 20 ஆண்டுகளாக மத்திய அரசில் இருந்த போது ஏன் ஒன்றிய அரசு என்று சொல்லவில்லை? அவர்கள் இருக்கும்போது எதையும் செய்யவில்லை. கல்வியை ஏன் மாநில பட்டியலில் சேர்க்கவில்லை.
பிரதமரும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழகத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவது தொடர்பான கூறியுள்ளார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான். பிரதமர் தமிழகம் மீது அன்பு செலுத்துவதை தினம் தினம் பார்த்து வருகிறோம். அனைவரும் கனவு கொண்டிருந்த ராமர் கோவில் கிடைக்க போகிறது. அதில் அனைவருக்கும் பங்கு உண்டு. யாரை அழைக்க வேண்டும் என்பது ராமர் கோவிலை சார்ந்தவர்கள் முடிவு செய்வார்கள். அதை அரசியல் ஆக்க வேண்டாம். குடியரசுத் தலைவர் வரக்கூடாது என நினைத்தவர்கள் குடியரசு தலைவரை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
சபரிமலை விவகாரம் வருத்தத்திற்குரியது. மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம் என்று சொல்லிவிட்டு,  இந்து மாதம் சார்ந்த துவேஷத்தை கடைபிடிப்பது தான் ஸ்டாலின், பினராய் விஜயன். சாமியை பார்க்க முடியாமல் திரும்பி வருவது வேதனைக்குரியது. அவர்களுக்கு அத்தனை பேருக்கும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.  வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என்றால், பக்தர்கள் குறைந்து விடுவார்கள் என அரசு எண்ணுகிறது. ஆனால் ஐயப்ப பக்தர்கள் நிச்சயம் வர வேண்டும். கூட்டம் அதிகமாகி கொண்டு தான் இருக்கும்.  யாருக்கும் கட்டுரை எழுதாத பிரதமர் விஜயகாந்துக்கு கட்டுரை எழுதியதன் மூலம் அவர் மீது எந்தளவு மரியாதை வைத்துள்ளார் என்பது தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

Source link