ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்… 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை.20 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் சிங் ஜோஷி அறிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத் தொடரில், அரசின் முக்கிய மசோதாக்கள் மற்றும் இதர நாடாளுமன்ற அலுவலகத்தின் மீது ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற ஒத்துழைக்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுவதாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரல்ஹாத் சிங் ஜோஷி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், மழைக்கால கூட்டத் தொடரிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முத்தலாக் தடை சட்டம் 370 சட்ட பிரிவு நீக்கம் போன்ற முக்கிய மசோதாக்களை போல பொது சிவில் சட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் இது என்பதாலும், எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதானி குழும முறைகேடு விவகாரம், இந்தியாவில் நிலவும் ஜனநாயகம் குறித்த லண்டனில் ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு போன்ற விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமளிகையில் ஈடுபட்டதால் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.