Pongal 2024 Tn People Are Celebrating Pongal Festival With Great Joy Today

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
பொங்கல் பண்டிகை 
நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது என்றால் அது பண்டிகைகள் தான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு பண்டிகையின் பிரதிபலிப்பாக திகழும் நிலையில் தமிழ்நாட்டின் தமிழர் திருநாளாக, பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. 
உற்சாக கொண்டாட்டம் 
வழக்கமாக பொங்கல் பண்டிகை  தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என பஞ்சாங்க கணக்கீட்டின் அடிப்படையில் மாறி மாறி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். 
அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, பச்சரிசி மற்றும் சர்க்கரை பொங்கல் என இரு வகையான பொங்கலானது தயாராகும். மேலும் பானையில் வைக்கப்பட்ட நீரானது பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என மக்கள் உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதனுடன் கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்டவை வைத்து சிறப்பு வழிபாடும் நடக்கும். 
பொங்கல் வைக்க உகந்த நேரம் 
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையான திங்கட்கிழமை வந்துள்ளதால் என்பதால் பஞ்சாங்கத்தில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பொங்கலிட சிறந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை இராகு காலம் என்பதால் அதற்கு மேல்  எமகண்டம், குளிகை தவிர்த்து மற்ற நேரங்களில் பொங்கலிடலாம். அதேசமயம் பொதுமக்கள் மறக்காமல் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழுங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள்..!

மேலும் படிக்க: Pongal 2024 Wishes: மக்களே போனை எடுங்க.. உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை சொல்லுங்க..!

Source link