நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரையை தொடங்கியுள்ளார். “பாரத ஒற்றுமை யாத்திரை” என முதல்கட்ட யாத்திரைக்கு பெயரிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயணத்துக்கு “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என பெயரிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் பரபரப்பு:

கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் பிரச்சினை மேல் பிரச்சினை வெடித்து வருகிறது. தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் நகோன் நகரில் உள்ள துறவி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் கோயிலில் வழிபாடு நடத்த சென்றார்.

ஆனால், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அந்த கோயிலில் வழிபாடு நடத்த ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் மதியம் 3 மணிக்கு மேல் வரும்படி காவல்துறை அறிவுறுத்தியது. இதனால், அவர்களுடன் வாக்குவாதம் செய்த ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று அஸ்ஸாமில் கவுகாத்தி வழியாக செல்ல முயன்றபோது ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி?

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என அஸ்ஸாம் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யாத்திரையின் போது ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் வன்முறையில் ஈடுபட்டது, தொண்டர்களை தூண்டியது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

அவருக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மக்களவை தேர்தலுக்கு பின், அவரை கைது செய்வோம். ஏனெனில், தேர்தலுக்கு முன் எடுக்கும் எந்த நடவடிக்கையும் தேவையற்ற விமர்சனத்தை ஏற்படுத்தும். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பிரச்னையை ஏற்படுத்துவதற்காகவும் படத்ரவா கோயிலில் நுழைய ராகுல் காந்தி முயற்சி செய்தார்.

அவர் அஸ்ஸாமை மிகவும் நேசிப்பவராக இருந்தால், யாத்ரா வழியில் பூபென் ஹசாரிகாவின் சமாதிக்குச் சென்றிருக்கலாம். அவர் ஸ்ரீமந்த சங்கரதேவரை மதித்திருந்தால், வழியில் உள்ள பார்பெட்டா சத்ராவில் பிரார்த்தனை செய்திருக்கலாம். இந்து மதத்தில் நம்பிக்கை இருந்தால், வழியில் உள்ள காமாக்யா கோயிலில் தரிசனம் செய்திருக்கலாம்" என்றார்.

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

So, It gave me some useful insights. glad I found this honestly.