தொடர்ந்து விரிவடையும் போர்.. ஈராக், சிரியாவை விட்டுவைக்காத அமெரிக்கா.. உச்சக்கட்ட பதற்றம்!

பாலஸ்தீனிய பகுதியான காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

பிராந்தியம் முழுவதும் விரிவடையும் போர்:

இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் சண்டையிட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்காசியாவில் தொடங்கிய போர் பிராந்தியம் முழுவதும் பரவிய நிலையில், ஜார்டனில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் கடும் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், ஜார்டனில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் பாதுகாப்பு படை, ஈரான் ராணுவம் ஆதரவு அளிக்கும் கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு தொடர்புடைய இடங்களில் அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈராக், சிரியாவை விட்டுவைக்காத அமெரிக்கா:

அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட தூரம் சென்று தாக்கி அழிக்கக்கூடிய பி 1 பாம்பர் விமானங்களை பயன்படுத்தி, அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. கமாண்ட் மையங்கள், கட்டுப்பாட்டு அறைகள், ராக்கெட், ஏவுகணை, ட்ரோன் ஆகியவற்றை சேகரிக்க உதவும் தளங்கள், ஆயுதங்களை விநியோகிக்க உதவும் தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தாக்கப்பட்ட இடத்தை பாதுகாத்து வந்தவர்கள்தான், தாக்குதலுக்கு இரையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் தாக்குதலை பொறுத்தவரையில், அல் கைம் அருகே உள்ள சிகா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதங்களை பதுக்கி வைக்க இந்த பகுதியை கிளர்ச்சியாளர்கள் குழு பயன்படுத்தி வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். ஜார்டனில் ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறிவிட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

வான்வழி தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்கா, "தாக்குதல் குறித்து ஈராக்கிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டோம்" என கூறியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஏமாற்றி வருவதாகவும் இது தொடர்பாக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஈராக் குற்றம் சுமத்தியுள்ளது.

ஈராக், ஈரானுடன் போர் நடத்த விருப்பம் இல்லை என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தாலும், குடியரசு கட்சி அளித்து வந்த நெருக்கடியின் காரணமாகவே அமெரிரக்க அதிபர் பைடன் நேரடியான வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Source link