What is speed dating? Growing support among the young generation, opposition from political leaders


Speed Dating: ஸ்பீட் டேட்டிங் நடைமுறை என்றால் என்ன? அது இளம் தலைமுறையினர் இடையே அதிக கவனம் ஈர்ப்பது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
காதலர் தின கொண்டாட்டமும் – எதிர்ப்பும்:
காதலர் தின கொண்டாட்டம் வழக்கம்போல் நடப்பாண்டில் இளைஞர்கள் மத்தியில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதேநேரம், இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்பினர் காதலர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கண்ட இடத்திலேயே இருவரையும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவது போன்ற நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகின்றன. முந்தைய காலத்தில் மதரீதியான அமைப்புகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த காதலர் தினத்திற்கு, தற்போது சாதிய அமைப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு சான்றாக தான், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மணமகன் – மணமகள் கூட்டம், வள்ளி கும்மி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
வள்ளிக்கும்மி – திருமண சந்திப்புக் கூட்டம்:
காதல் திருமணத்தை கடுமையாக எதிர்க்கும் சாதிய அமைப்புகள், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்காக இணையை தேர்வு செய்ய சிறப்பு திருமண சந்திப்புக் கூட்டங்களை நடத்துகின்றனர். ஈரோட்டில் நடைபெற்ற வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில், தங்கள் சாதி ஆணையே திருமணம் செய்து கொள்வோம் என்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் உறுதிமொழி வாங்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த நிலையில் தான் மேற்கூறிய கலாசாராத்திற்கு நேர் எதிராக, வெளிநாடுகளில் பின்பற்றப்படும் பல புதிய நடைமுறைகள் தற்போது இந்திய இளைஞர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவின் ‘அன்பின் முத்தம்’ போராட்டம்:
அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2014ல், ‘கிஸ் ஆப் லவ் – அன்பின் முத்தம்’ என்ற பெயரில், பேஸ்புக் சமூக வலைதளம் வாயிலாக இணைந்த காதலர்கள் போராட்டம் நடத்தினர். காதலுக்கும், காதலர் தினத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், வீதியில் இறங்கி தங்களுக்குள் முத்தம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில், அன்பின் முத்தம் போராட்டங்கள் நடைபெற்றன.
‘ஸ்பீட் டேட்டிங்’ என்றால் என்ன?
இதனிடையே, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாக தற்போது புதுப்புது வகையான முயற்சிகளை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தான்,  சமூக தொடர்பை விரிவுபடுத்துவதாக் கூறி ‘ஸ்பீட் டேட்’ என்பதை அறிமுகப்படுத்தியுள்ளனர். அறிமுகம் இல்லாத நபர்கள் ஒன்று கூடி அங்கு ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவது, பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, உணவு மற்றும் தேநீர் அருந்துவது போன்றவை ‘ஸ்பீட் டேட்’ நிகழ்ச்சியின் நடைமுறைகளாக உள்ளன. அதோடு,  முன்பு அறிமுகம் இல்லாதவர்களுடன் டீ குடிப்பது (டீ டேட்), கண்களை கட்டிக்கொண்டு புதிய நபர்களுடன் பேசுவது (பிளைண்ட் டேட்), ஓவியம் வரைவதென போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சிகள், தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அண்மையில் கோவையிலும் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஸ்பீட் டேட் ஆதரவும், கண்டனங்களும்:
 ’’தொழில்நுட்பம் வளருகிறது, எல்லாம் மாறுகிறது, உலகமே மிகவும் சிறிதாகிவிட்டது. ஆனால், இன்னமும் சாதி, மதம் என்று கூறி காதலர்களை அடிப்பது, துன்புறுத்துவது, காதலை எதிர்ப்பது எல்லாம் நடந்து வருகிறது. இது போன்ற பிரச்னைகளை களையவும், சமூக தொடர்பை அதிகரிக்கவும் தான் காதலர் தினத்தை முன்னிட்டு, பல நகரங்களில் ஸ்பீட் டேட் நடத்தப்படுவதாக, பங்கேற்பாளர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர். அதேநேரம், இந்த டேட்டிங் போன்ற நடைமுறைகள், கலாசாரா சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாக சில சாதிய பிரிவு தலைவர்கள் விமர்சிக்கின்றனர். யாரென்றே தெரியாதவர்களை சந்திப்பது, மது குடிப்பது, டீ குடிப்பது எல்லாம் சீர்கெடுவதற்கான முயற்சி தான் என்றும், குடும்ப முறையை அழிக்கும் முயற்சியை செய்து வருகின்றனர் என்றும் சிலர் சாடுகின்றனர்.

மேலும் காண

Source link