பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு

இன்னும் பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள்,மாட்டிவிடத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கயூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவடிக்காரனுர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்ற பெயர் பெற்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகாலம் ஆகிறது. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் கிடப்பில் போட்டு விட்டனர். திமுக புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை. அதிமுக கொண்டு வந்து திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டது. இதுதான் திமுகத்தின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சாலைவிபத்துகளால் விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்துவருகிறோம். இதை கருத்தில் கொண்டு தான் போக்குவரத்து நெரிசல் எங்கெல்லாம் உள்ளதோ? அங்கு எல்லாம் கண்காணிக்கப்பட்டு ஆய்வுசெய்து அதிமுகஆட்சி சிறப்பான சாலைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திமுகஆட்சியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. சுணக்கமாக செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் புரட்சி, மறுமலர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. சேலம் மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்குமே எந்தத் திட்டம் செயல்படுத்தவில்லை. அவர் ஒன்றே ஒன்று செய்தார். தந்தைக்கு நினைவுமண்டபம் கட்டியுள்ளார். மேலும் நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் வைக்க உள்ளதாக கூறியுள்ளார். எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வேண்டாம் என்று சொல்லவில்லை.

பேனாவை கடலில் வைக்க வேண்டாம் தரையிலே வைக்கலாம். எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என எழுதுகின்ற பேனாவை 82 கோடி ரூபாயில் வைப்பதற்கு பதிலாக பலதிட்டங்களை நிறைவேற்றலாம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 82 கோடியில் பேனா வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் பயனடையுவார்கள். தற்போது நிறுத்துவைத்ததாக பத்திரிகை செய்தியில் பார்த்தேன்.

பேனா சின்னம் வைப்பதற்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். திமுக தலைவராக இருந்தார் மறுக்கவில்லை. அவரது நினைவுமண்டபம், அறிவாலயம் ஆகியவை முன்பு வைக்கலாம். 2 கோடியில் வையுங்கள். மக்களின் பணத்தை எடுத்து வீண் செலவு செய்யவேண்டாம் என்பதுதான் மக்களின் கோரிக்கையை நாங்கள் பிரதிபலித்து வருகிறோம்.

ஒரு யூனிட் மின்சாரம் ஆறு ரூபாய்க்கு வாங்க வேண்டியதையும், 12 ரூபாய்க்கு வாங்கி கொள்ளையடித்து வருகிறார்கள். மக்களின் வரிப்பணம் எவ்வாறு போகிறது என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். திமுகஆட்சி கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி அமைத்துள்ளார்கள். எந்த துறையில் எவ்வாறு கொள்ளையடிக்கலாம் என்பதை பற்றி தான் திட்டமிட்டு வருகிறார்கள். இந்த ஆட்சியில் பல பேர் சிறைக்கு போவதற்கு தயாராகிவிட்டனர். ஒவ்வொருவராக சென்று வருகின்றனர். எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியாது.

நான் முதல்வராக இருந்தபோதும் வழக்கு தொடர்ந்தனர், அந்த வழக்கில் நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெண்டர் நடைபெறாத நிலையில் ஊழல் என்று கூறுகிறார்கள் எவ்வளவு பெரிய பச்சைபொய். எப்படியாவது அதிமுக மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் திமுக ஆட்சியில் 30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதனால் மத்திய அரசு விழித்துக் கொண்டு என்னென்ன தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து வருகிறது. இன்னும் பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள். மாட்டிவிடத் தேவையில்லை.

கொஞ்சமாக கொள்ளை அடித்தால் தான் பதுக்கி வைக்கமுடியும், அளவுக்கு மீறி சம்பாதித்தார். அளவுக்கு மீறி சாப்பிட்டால் அமிர்தமும் விஷமாகும்என்ற பழமொழி போன்று தான். அளவுக்கு மீறி சம்பாதித்தால் ஜெயிலுக்கு தான் செல்லவேண்டும். இவ்வாறு கூட்டத்தில் பேசினால் என்மீது வழக்கு தொடர்வார்கள், என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை.

தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நடைபயணம் சென்று கொண்டிருந்தபோது,அமைச்சரிடம் முதல்வர் கேட்கிறார் கழகத் தலைவன் திரைப்படம் எவ்வாறு செல்கிறது என்று கேட்கிறார். அதான் நாட்டுக்கு முக்கியமாக என்று கேள்வி எழுப்பினார். மக்கள் முதலில் சிரமத்தில் உள்ளார்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மருத்துவவசதி எப்படி கிடைக்கிறது என்று கேட்டால் சிறந்த முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். தன் மகன் நடித்த படம் குறித்து கேட்கின்றார் என்றால் இவர் மக்களுக்கான முதலமைச்சரா? இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.