SRH Vs PBKS, IPL 2024 punjab kings up against sun risers hyderabad in match 23 at mohali | SRH Vs PBKS, IPL 2024: வெற்றியை தொடரப்போவது யார்? பஞ்சாப்


SRH Vs PBKS, IPL 2024: பஞ்சாப்  மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் மஹாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ்  மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.
பஞ்சாப் – ஐதராபாத் மோதல்:
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், ஐதராபாத் அணியும் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டில்  வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டிகளில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியிலும் வெற்றியை தொடர இரு அணிகளும் மல்லுகட்டுகின்றன.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. தவான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். அதேநேரம், ஷஷாங்க் சிங் ஒரே போட்டியில் கவனிக்கத்தக்க வீரராக மாறியுள்ளார். மற்ற பேட்ஸ்மேன்களும் உரிய பங்களிப்பு அளித்தால் மட்டுமே இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியால் வெல்ல முடியும். சொல்லிக் கொள்ளும்படியாக பஞ்சாப் அணியில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் என யாரும் இல்லை. ரபாடா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. மறுபுறம் ஐதராபாத் அணியோ பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. அபிஷேக் சர்மா, கிளாசென், மார்க்ரம் மற்றும் டிராவிஸ் ஹெட் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.  பந்துவீச்சிலும் புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ், நடராஜன் என நல்ல வலுவான  லைன் – அப்பை ஐதராபாத் அணி கட்டமைத்துள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 21 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 212 ரன்களையும், குறைந்தபட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 211 ரன்களையும், குறைந்தபட்சமாக 119 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சாதகமான சூழலை கொண்டுள்ளது. எனவே  இந்த போட்டி சுவாரஸ்யமாக அமையலாம்.  டாஸ் வென்ற பிறகு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதே நல்ல முடிவாக இருக்கும்.
உத்தேச அணி விவரங்கள்:
பஞ்சாப்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஷாபாஸ் அகமது, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் , புவனேஷ்வர் குமார், டி நடராஜன், மயங்க் மார்கண்டே
 

மேலும் காண

Source link