காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்.. நடந்தது என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்:

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு புலம்பெயர் தொழிலாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் பெயர் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர்.

ஜம்மு காஷ்மீரில் தொடர் பதற்றம்:

தாக்குதலில் காயமடைந்த புலம்பெயர் தொழிலாளரின் விவரம் இன்னும் தெரியவில்லை. அம்ரித்பால் சிங், வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "ஸ்ரீநகரில் உள்ள ஷஹீத் கஞ்ச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. காயமடைந்த புலம்பெயர் தொழிலாளர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபரில், புல்வாமாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் நடந்த இரண்டாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். ஈத்கா பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காவல்துறை ஆய்வாளர் மஸ்ரூர் அகமது வானி மீது 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கடந்த காலங்களில், ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் இத்தகைய தாக்குதல்கள், சூழலை மேலும் பதற்றமடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல், வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Source link