இலங்கை கடற்படை அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது..!


TN Fishermen Arrest: தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
22 தமிழக மீனவர்கள் கைது:
தமிழக மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில், மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த  இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு,  தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து  அவர்கள் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விசைப்படகுகளில் இரண்டு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தது எனவும், ஒன்று நாகப்பட்டினத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கைது நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கைது நடவடிக்கை:
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பது, கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசும், தமிழக மீனவர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு நிரந்தர தீர்வு என்பது இதுவர எட்டப்படவில்லை.
அண்மையில் நடந்த கைது சம்பவங்கள்:

அந்த வகையில் தான் கடந்த மாதம் 21ம் தேதி இலங்கைக்கு பீடி இலை  கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்  லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும்  இலங்ககை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்களை கைது செய்தனர். இதில் 20 பேர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.  3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.
கடந்த ஜனவரி 6ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த ஜனவரி 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. 
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில், இலங்கைக் கடற்படையினர் 243 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் காண

Source link