டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்…பிரதமர் மோடி வாழ்த்து!

 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை குவித்தது. பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் படி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
 
முன்னதாக இந்த போட்டியில் தன்னுடைய 500 வது விக்கெட்டை அஸ்வின் எடுத்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து கூறிவரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் மற்றும் சாதனைகள் அவரது திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். அவர் மேலும் சிகரங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். 

Source link