சேது சமுத்திர திட்டம் பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டம் – எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள்


சேது சமுத்திர திட்டம் பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டம்- அண்ணாவின் கனவை நினைவாக கலைஞர் நிறைவேற்ற துடித்த திட்டம்-150 ஆண்டு கால கனவான சேது சமுத்திர திட்டம் நிறைவேறுமா- எதிர்பார்ப்புடன் தமிழக மக்கள்.

இந்தியா 7 ஆயிரத்து 517 கிலோ மீட்டர் நீள கடற்கரையை கொண்டு உள்ளது. இங்கு 12 பெருந்துறைமுகங்கள், 185 சிறிய துறைமுகங்களை கொண்டு உள்ளது. இதனால் கடல் வாணிபத்தில் இந்தியா பல நூற்றாண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 கிலோ மீட்டர் நீள கடற்கரை அமைந்து உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை இணைக்கும் வழித்தடம் இதுவரை இல்லை. நம் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுகத்துக்கு செல்ல வேண்டுமென்றால் மற்றொரு நாட்டின் கடல் பகுதியை பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சென்னை, எண்ணூர், விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்ல வேண்டி உள்ளது. மும்பை , ஜே.என்.பி.டி போன்ற மேற்கு துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களும் இலங்கையை சுற்றி தான் செல்ல இயலவேண்டிய நிலை உள்ளது.இதனால் சுமார் 254 முதல் 424 கடல் மைல் வரை கூடுதல் பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. கூடுதலாக 32 மணி நேரம் இந்த பயணம் நீடிக்கிறது. இதனால் பெரும் பொருளதார இழப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்திய கடல் பரப்பில் கப்பல் வழித்தடத்தை அமைக்க விரும்பினர். அதுவே சேதுக்கால்வாய் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தமிழன் கால்வாய் என்று அழைத்தார். இந்த கால்வாயின் மொத்த நீளம் 167 கிலோ மீட்டர் ஆகும். கால்வாயின் ஆழம் 12 மீட்டராகவும், அகலம் 300 மீட்டராகவும் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் 78 கிலோ மீட்டர் தூரம் ஏற்கனவே ஆழமான பகுதியாக உள்ளது. 89 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் தோண்ட வேண்டி உள்ளது.

கால்வாய் திட்டத்தை 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவமைத்து இருப்பது, வெறும் பொருளாதார நோக்கோடு மட்டும் அல்ல. தொலைநோக்கு பார்வையுடன் நாட்டின் பாதுகாப்பு அம்சத்தையும் உள்ளடக்கி உள்ளது. தற்போது தென்பகுதியில் உள்ள கடற்படை கப்பல்கள், கடலோர காவல்படை கப்பல்கள் வட தமிழகத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய நிலைதான். சமீபகாலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்ட தமிழகத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை மத்திய அரசு அமைத்தது. இதில் கூடங்குளம் அணுமின்நிலையம், தூத்துக்குடி ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்,குலசேகரன்பட்டிணம் ராக்கெட் ஏவுதளம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை அடங்கும். இதனால் மத்திய அரசு தென் தமிழக கடற்கரையை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடற்படை கப்பல்களையும் தூத்துக்குடி கடல் பகுதியில் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தால், இந்திய போர்க்கப்பல்கள் இலங்கை கடல் பகுதி வழியாக செல்லும் போது, குறுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் கப்பல்கள் நம் பாதுகாப்பு இலக்கை அடைவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்று பாதுகாப்பதே சரியாக அமையும். அதனை விடுத்து இலங்கையை சுற்றி வருவது சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள சேதுக்கால்வாய் திட்டம் மட்டுமே தீர்வாக அமையும் என்று கருதி உள்ளனர். இதனால் சேதுக்கால்வாய் அமைக்க பல்வேறு கட்டங்களில் குழுக்கள் அமைத்து திட்டம் தீட்டப்பட்டன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க. தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அவர்களின் அனைத்து தேர்தல் அறிக்கைகள் உள்ளன. இந்த திட்டத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தனர். ரூ.2 ஆயிரத்து 427 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.867 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. சேது சமுத்திர திட்டத்தை பாஜக எதிர்க்க திட்டம் நிறைவேறாமல் போனது.

இந்த திட்டம் நிறைவேறினால் ராமேஸ்வரம், தொண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களும், குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா துறைமுகங்கள் வளர்ச்சி பெறும். அரபிக்கடலில் இருந்து வங்கக்கடலுக்கு வரும் கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டு வருவதால் ஏற்படும் நேரம், எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். ரோந்து பணிகள் அதிகரிப்பதால் கடத்தலை தடுக்க முடியும். பொருளாதார வளர்ச்சி பெருக்கம் ஏற்படும். அதே போன்று நம் கடல் பரப்பிலேயே போர்கப்பல்கள் ரோந்து சென்று பாதுகாப்பை உறுதிபடுத்த முடியும். இதனால் சேதுக்கால்வாய் அத்தியாவசிய தேவையாகி உள்ளது. 150 ஆண்டுகளாக நிறைவேறாத தமிழனின் கனவு கால்வாய் திட்டம் இன்னும் கனவாகவே உள்ளது. கனவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு இருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தில் பேசிய போது, ராமேசுவரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது, தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகும். எனவே, தாமதமின்றி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு முன்வரவேண்டும். இதை செயல்படுத்த தமிழக அரசு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கும் என்று பேரவை ஒருமனதாகத் தீர்மானிக்கிறது என்றார்.தொடர்ந்து, மீனவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அதிமுகவும், திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பிலும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, காங்கிரஸ், பாமக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மநேம, கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்து குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் தற்போதைய மக்களவை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காண

Source link