katchatheevu: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் கூட இல்லாத நிலையில், கச்சத்தீவு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. இதனால், இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படுமோ என முன்னாள் தூதர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பற்றி எரியும் கச்சத்தீவு விவகாரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 14 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் இதற்கு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு துணை போனதாகவும் பிரதமர் மோடி குற்றம் சுமத்தினார்.
கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை காங்கிரஸ் அரசு பறித்துவிட்டதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சுமத்தினார். கச்சத்தீவை ஒப்பந்தத்தின் காரணமாகவே வாட்ஜ் பேங்க் பகுதி இந்தியாவுக்கு தரப்பட்டதாகவும் இலங்கையில் பாதிப்புக்குள்ளான 6 லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் பதிலடி அளிக்கப்பட்டது.
50 ஆண்டுகால விவகாரத்தை தேர்தலுக்காக பாஜக அரசு எழுப்புவதாகவும் இதனால் இலங்கை உடனான இந்திய உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்திய இலங்கை உறவில் விரிசலா?
கச்சத்தீவு விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பியதை தொடர்ந்து இலங்கை அரசு முதல்முறையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. முடிந்து போன கச்சத்தீவு விவகாரம் பற்றி மீண்டும் பேச எந்த விதமான தேவையும் ஏற்படவில்லை என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் செய்தி தொலைக்காட்சிக்கு அலி சப்ரி அளித்த பேட்டியில், “50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்னை பற்றி பேசப்பட்டு, தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே, கச்சத்தீவு தொடர்பாக மேலும் பேச எந்த தேவையும் ஏற்படவில்லை” என்றார்.
தனியார் செய்தி நிறுவனத்திடம் இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக பேசுகையில், “இந்தியாவில் தேர்தல் வருவதால் இந்த விவகாரத்தில் இரண்டு அரசியல் கட்சிகளும் சண்டை போட்டு கொள்கின்றன. எனவே, ரணில் விக்கிரமசிங்க அரசு இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.
இலங்கையிடம் கச்சத்தீவு செல்ல யார் பொறுப்பு என்பது பற்றியே விவாதம் எழுந்துள்ளது. தற்போது, அது யாருக்கு சொந்தம் என்பது குறித்து கேள்வி எழுப்பவில்லை. எனவே, இதில் இலங்கை கருத்து தெரிவிக்க அவசியம் இல்லை” என்றார்.
கச்சத்தீவு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இரு நாட்டு மீனவர்களிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பிரச்னையில் இருந்து திசை திருப்பவே இந்திய தலைவர்கள் இப்படி பேசி வருவதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் அதிகமாக மீன்பிடிப்பதால் அங்குள்ள மீன்வளம் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும் காண