INDIA Alliance Partner AAP Hints At Going Solo In Punjab For Lok Sabha Election Congress Yet To Take A Call

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது.
INDIA கூட்டணியில் குழப்பம்:
அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதியில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் வெளியிடப்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 
முடிந்தவரையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ஒரே வேட்பாளரை களமிறக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது. ஆனால், மேற்குவங்கம், கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால், மேற்குவங்கத்தை தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவாக உள்ளது.
வலுவாக உள்ள மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டு குறைவான தொகுதிகளில் போட்டியிட உள்ளூர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜக பலவீனமாக உள்ள பஞ்சாபில் தனித்து போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
காங்கிரஸ் கட்சிக்கு அல்வா கொடுக்கும் ஆம் ஆத்மி:
இந்த நிலையில், பஞ்சாபில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், “வரும் பொதுத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 13 மக்களவை தொகுதிகளையும் தங்களுக்கு [ஆம் ஆத்மிக்கு] வழங்குவதன் மூலம் பஞ்சாப் ஒரு கலங்கரை விளக்கமாக உருவெடுக்கும்.
மாநில அரசு மக்கள் நலனுக்காக மகத்தான பணிகளை செய்துள்ளதால், மக்கள் மீண்டும் எங்களுடன் துணை நிற்பார்கள். 13-0 என்ற விகிதத்தில் மாநிலத்தில் வரலாறு படைக்கப்படும். அங்கு 13 இடங்கள் மாநில அரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு ஆதரவாக தீர்ப்பு தரும். பஞ்சாபுக்கு எதிரான நிலைப்பாட்டிற்காக மக்களால் எதிர்க்கட்சியினர் கைவிடப்படுவார்கள். 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்” என்றார்.
நாளை நடைபெற உள்ள சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Source link