சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் Mr. மனைவி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்கிய இந்த தொடரில் பவன் ரவீந்திரன் மற்றும் ஷபானா ஆர்யன் லீட் ரோலில் நடித்து வருகிறார்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாவதால் ஏராளமான ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களையும் கடந்து ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடரான ‘செம்பருத்தி’ சீரியலில் பார்வதி என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷபானா. இவர் சின்னத்திரை நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட ஷபானா, Mr. மனைவி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
Mr. மனைவி சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து வந்தார் ஷபானா. இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பகிர்ந்துள்ள தகவல் அவரின் ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சீரியலில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அவரின் இன்ஸ்டா போஸ்டில் “நிறைய யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகு Mr. மனைவி சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். இந்த முடிவை அவ்வளவு எளிதாக எடுத்த முடிவல்ல. இருப்பினும் இந்த நேரத்தில் சீரியலை விட்டு விலகுவது சரியான தேர்வாக இருக்கும் என நம்புகிறேன்.
அஞ்சலியாக என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களின் அசைக்கமுடியாத ஆதரவும் ஊக்கமும் தான் தொடர்ந்து எனக்கு உந்துதலாக இருந்து வருகிறது. நடிப்பின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் என்னுடைய புதிய புராஜெக்ட்களும் புதிய கதாபாத்திரங்களும் தொடங்கும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி!”
மேலும் சன் டிவி, விஷன் டைம்ஸ் மற்றும் Mr. மனைவி குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இயக்குநர்கள் ஜேஆர் மற்றும் நிதின் சாருடன் பணிபுரிவது ஒரு முழுமையான பாக்கியம். மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அன்புடன் அஞ்சலியாக உங்கள் ஷபானா! என போஸ்ட் செய்துள்ளார் நடிகை ஷபானா ஆர்யன்.
நடிகை ஷபானாவின் இந்த முடிவு சன் டிவி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக அஞ்சலி கேரக்டரில் யார் தொடர போகிறார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காண