Special Arrangements Have Been Made For The Thaipusam Thaiupoosam Festival At Tiruporur Kandasamy Murugar Temple In Chengalpattu District.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி முருகர் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவில் வரலாறு ( thiruporur kandaswamy temple )
புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கிய முருகர் கோவில்களில் திருப்பூரில் கந்தசாமி கோவிலும் ஒன்று. கந்தபுராணக் கூற்றுப்படி, முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்க்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்க்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த, சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில், கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்தார். முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து, திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்
தந்தை சிவபெருமானைப்போலவே,  திருப்போரூர் முருகன் சுயம்பு மூர்த்தமாக, தோன்றியவர் என்கிறது தல புராணம். சுயம்பு மூர்த்தியாக தோன்றி இருப்பதால் இக்கோவிலில் அபிஷேகம் நடைபெறுவதில்லை. மூலவருக்கு பதிலாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்தில் கந்தக் கடவுளின் திருநாமங்கள் சுமார் 300க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன. எனவே, யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
தைப்பூசம் எப்போது?
கடந்த 15ம் தேதி பொங்கல் பண்டிகையாக தை மாதம் பிறந்தது. இதையடுத்து, தைப்பூச கொண்டாட்டத்திற்கு முருக பக்தர்கள் தயாராகி வருகின்றனர். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த தைப்பூசமானது குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை வருகிறது. இதனால், இந்த தைப்பூசம் இன்னும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. வரும் 25ம் தேதி காலை 9.14 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 26ம் தேதி காலை 11.07 மணி வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால், 25ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி வரும் 24ம் தேதி இரவு 10.44 மணி முதல் தைப்பூச தினமான 25ம் தேதி இரவு 11.56 மணி வரை பௌர்ணமி திதி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கந்தசாமி கோவிலில் கோலாகலம்
புகழ்பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் தைப்பூச விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. தைப்பூச விழாவையொட்டி கோவில்  மண்டப வளாகத்தில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விதமாக அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சி, அன்னதானம், பட்டிமன்றம் பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், இன்று மாலை  முதல், நாளை இரவு வரை நடைபெறுகிறது.
இன்று, மாலை  அமைச்சர் அன்பரசன் அறுபடை வீடு அரங்குகள் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். நாளை, காலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஒரு நாள் முழுதும் நடைபெறும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். நாளை முழுவதும் இந்த அன்னதானம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Source link