the goat life prithviraj say prakash raj threw the cheque he offered to him


தான் தயாரித்த முதல் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தான் வழங்கிய காசோலையை தூக்கி வீசியதாக நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
ப்ரித்விராஜ்
20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ப்ரித்விராஜ். இயக்குநர் ப்ளெஸ்ஸி மற்றும் ப்ரித்விராஜின் கடின உழைப்பும் காத்திருப்பிற்கும் பின்பு தற்போது திரையரங்கில்  வெளியாக இருக்கும் படம் தி கோட் லைஃப் (The Goat Life).
தமிழில் ‘ஆடு ஜீவிதம்’ என்கிற தலைப்பில் இப்படம் வெளியாகிறது. அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்கிற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.
கேரளத்தில் இருந்து செளதிக்கு வேலைத் தேடிச் சென்ற நஜீப் முகமத் என்பவர் அங்கு ஆடு மேய்க்கும் அடிமையாக மாட்டிக்கொண்ட உண்மைக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. வரும் மார்ச் 28ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நடிகர் பிரித்விராஜ் தெரிவித்திருப்பதாவது:
16 ஆண்டுகால காத்திருப்பு!
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைப் பணிகள் தொடங்கி  2018ஆம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்த அறிவிப்பு வெளியாகி இன்றைய நாள்வரை மொத்தம் 16 ஆண்டுகளை இந்தப் படத்திற்காக தங்களை அர்பணித்திருக்கிறார்கள் படக்குழுவினர். இது தொடர்பாக பேசிய ப்ரித்விராஜ் “ 2008இல் இந்தப் படத்தை இயக்குநர் ப்ளெஸ்ஸி  எடுக்க நினைத்தபோதே அவரிடம் நிறைய திட்டங்கள் இருந்தன.
வெளிநாட்டில் நிஜ பாலைவனத்தில் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இத்தனை ஆண்டுகால தாமதம் என்பது ஒரு வகையில் நல்லது என்றுதான் நான் சொல்வேன். 2008இல் எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் தயாரிப்பாளர் இல்லை. ஆனால் 2018இல் இந்தப் படம் தொடங்கியபோது சினிமாவில் எனக்கு ஒரு பார்வையும் அனுபவமும் ஏற்பட்டிருந்தது. இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்து கடைசி நாள் படப்பிடிப்பு வரை நான் வேறு ஒரு மனிதாக மாறி இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
செக்கை தூக்கி எறிந்த பிரகாஷ் ராஜ்
மேலும் தமிழில் தான் நடித்த படங்களில் தான் திரும்பி பார்க்க விரும்பும் படமாக மொழி இருப்பதாக தெரிவித்த ப்ரித்விராஜ், “ மொழி படம் ஒரு மாடர்ன் கிளாசிக். ஒலியைக் கேட்க முடியாத ஒரு பெண், ஒலியை கொண்டாடும் ஒருவன். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் காதலை படமாக்கியிருப்பார் ராதா மோகன்.
இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் பிரகாஷ் ராஜ் தான். இந்தப் படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் கல்லூரி படிக்கும் நண்பர்கள் மாதிரி நெருக்கமாகி விட்டோம். மொழி படத்திற்கு பின் நாங்கள் இருவரும் சேர்ந்து நிறையப் படங்களில் நடித்திருக்கிறோம். நான் தயாரித்த ‘9’ படங்களில் அவர் நடித்தார். அதற்காக அவருக்கு செக் கொடுத்தபோது ”என்ன தைரியம் இருந்தா என்கிட்ட செக் கொடுப்ப?” என்று சொல்லி அதைத் தூக்கி எறிந்தார். என்னை எப்போதுமே வேறு ஒருவனாக அவர் பார்க்கவே மாட்டார் “ என்று ப்ரித்விராஜ் கூறியுள்ளார்.

மேலும் காண

Source link