அனைத்து துறைகளும் வீழ்ச்சி.. ஜப்பானை தொடர்ந்து பொருளாதார மந்தநிலையில் சிக்கிய பிரிட்டன்!

பிரிட்டனில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பது உலக பொருளதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, பொருளாதாரத்தை சீர்செய்வேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி அமைத்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பொருளாதார மந்தநிலை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பொருளாதார மந்தநிலை என்றால் என்ன?

தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வீழ்ச்சி அடைந்தால் அதுவே பொருளாதார மந்தநிலை எனப்படும். அந்த வகையில், ஜப்பானை தொடர்ந்து பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 2023ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 0.1 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்த நிலையில், நான்காவது காலாண்டில் 0.3 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டது.

பிரிட்டனில் அனைத்து முக்கிய துறைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உற்பத்தி, கட்டுமானம், மொத்த விற்பனை ஆகிய துறைகள் வீழ்ச்சிக்கான முக்கிய காரணியாக உள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, பிரிட்டன் ஜிடிபி 0.1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலையும் பிரிட்டன்:

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கையில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளான 2020ஆம் ஆண்டை தவிர்த்தால், இது பிரிட்டனின் மோசமான வளர்ச்சியாகும். கடந்த 2009ஆம் ஆண்டு, உலக பொருளாதார வீழ்ச்சியால் உலக நாடுகளே ஸ்தம்பித்தன. கடந்த 2022ஆம் ஆண்டு, பிரிட்டன் 4.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்தது.

இந்தாண்டின் இறுதியில் பிரிட்டன் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெளியாகி வரும் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை கன்சர்வேடிவ் கட்சிக்கு மேலும் பின்னடைவை தந்துள்ளது.

பிரிட்டனை போன்றே, ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.3 சதவீதமாக குறைந்த நிலையில், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால், உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பான் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆபத்தா?

முதலீடு மற்றும் உள்நாட்டு தேவையின் அடிப்படையில் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கூறுகின்றனர். வல்லரசு நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 3 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link