Cyber crime Fraud gang swindled 6 people of Rs 2.81 lakh through internet in Puducherry – TNN | Cyber crime: இணையவழி மூலம் 6 பேரிடம் ரூ.2.81 லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பல்


புதுச்சேரி: புதுச்சேரியில் இணையவழி மோசடி மூலம் 6 பேரிடம் ரூ.2.81 லட்சத்தை சுருட்டிய மோசடி கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையவழி மோசடி ( OTP எண் மோசடி )
புதுச்சேரியை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணிற்கு தெரியாத நபர் செல்போன் மூலம் தொடர்புகொண்டு கூரியர் சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அப்போது, கூரியரை டெலிவரி செய்ய ஓடிபி OTP எண்ணை பகிருமாறு வலியுறுத்தியுள்ளார். நம்பிக்கையின் பேரில் அவரும் OTP எண்ணை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பேஸ்புக் விளம்பரம் 
இதேபோல் அமுதா என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர், அதிலிருந்த லிங் வழியாக சென்று வங்கி விவரம் மற்றும்  OTP எண் உள்ளிட்ட தகவலை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1,999 மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் எனேபிள் பேமென்ட் சிஸ்டம் முறையை பயன்படுத்தி குணசேகரன் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் என்பவர் சுற்றுலா செல்வதற்காக ஆன்லைனில் ரூ.1,63,750 செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். அதன்பிறகு, அவரை சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றியுள்ளனர்.
ஆன்லைனில் முதலீடு
சசிகலா என்ற பெண்ணிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத நபர் கூறியுள்ளார். இதை நம்பி அவரும் ரூ.92,660ஐ முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்து முடித்துள்ளார். அதன் பிறகு, சம்பாதிக்க பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பணம் செலுத்துமாறு மோசடி நபர்கள் கூறியிருக்கிறது. அதன் பிறகு, அவர் மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
ஜெகன் என்பவர் தவறுதலாக வேறு ஒருவருக்கு ஜிபே மூலம் ரூ.10,000 பணத்தை அனுப்பியுள்ளார். மொத்தமாக 6 பேரிடம் ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 409ஐ மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் அறிவுரை : 
ஆன்லைன் செயலி மூலம் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரண்டு மடங்காக பணம் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும், கிரிப்டோ கரன்ஸி, டாஸ்க் முடித்தால் அதிக பணம், பிட் காயினில் அதிக வருமானம் என்று கூறி வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக மர்ம நபர்கள் அதிகளவில் மெசேஜ் அனுப்பி வருவதால், உங்களது வங்கி கணக்கு எண் ரகசிய எண் ஆகியவற்றை கேட்பவர்களிடம் அது குறித்து தெரிவிக்ககூடாது. இதன் வாயிலாக பண மோசடி செய்யப்படும்.
ஆசை வார்த்தை காட்டி மோசடி
எனவே இதில் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும். இப்படி கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு, பிட்காயின் என்று வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்பு கொண்ட மொபைல் எண், பண பரிமாற்றம் நடந்த வங்கி கணக்குகள் போன்ற வற்றை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவை இந்தியாவில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தகம் அல்ல என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். சமூக வலைதளங்களில் தங்களைப்பற்றிய விவரங்களை வெளியிடும் போது அதனை வைத்து கிராமப்புறங்களில் சற்று வசதியாக உள்ளவர்கள் பற்றிய விபரங்கள் ஹேக்கர்ஸ்களுக்கு தெரிகிறது. அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று மிகவும் நுணுக்க மாக அறிந்து கொண்டு ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்து வருகிறார்கள். 
 

மேலும் காண

Source link