மயிலாடுதுறையில் நடைபெற்ற பிராமணர் சமுதாயம், சம்பிரதாயங்களையும், இந்து கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுபவர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சங்கர ராமநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட எந்த இட ஒதுக்கீட்டிலும் வராத முற்படுத்தப்பட்டுள்ள வகுப்பில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% சிறப்பு இட ஒதுக்கீடு என்ற தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிராமணர்களின் முன்னேற்றத்துக்கு தனி நலவாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் மற்ற சமுதாயத்திருக்கு அளிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு சலுகை போல, முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் 35 வயதாக உயர்த்த வேண்டும், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பிராமணர் சமுதாயம், சம்பிரதாயங்களையும், இந்து கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுபவர்களை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவோதயா பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும், மத்திய அரசாலும், உச்சநீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டு எல்லா மாநிலத்திலும் சட்டமாக அமல்படுத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் எந்த காரணத்துக்காகவும் ரத்து செய்ய கூடாது, காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் உபரி நீரை தஞ்சை, அரியலூர், சிதம்பரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் தடுப்பணை கட்டி சேமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயிலை காரைக்கால் வரை நீட்டித்து மீண்டும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை நகரைச் சுற்றி செல்லும் பைபாஸ் சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் ஆகிய 10 அம்ச தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.