Union Budget 2024 Will an industrial park be set up in Villupuram


தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு, விழுப்புரம் மாவட்டத்துக்கு உண்டு. புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அதையொட்டி ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என 90 சதவீத அரசு அலுவலகங்களும் ஒருங்கிணைந்த மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்களின் அலைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனை கொண்டுவந்தது முன்னாள் முதலவர் கலைஞர் என்பதும் குறிப்படத்தக்கது.
தொழில் துறை தற்போது வளரவில்லை
விழுப்புரம், திண்டிவனத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி, திண்டிவனம் அருகே தனியார் சட்டக்கல்லூரி, அரசு, தனியார் மகளிர் கல்லூரிகள், திண்டிவனம் அருகே வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவைகளும் இம்மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கின்றன. தற்போது வானூரில் அறிவிக்கப்பட்டுள்ள ஐ.டி பார்க் பணிகள் முழுமையாக முடிந்தால், அதையொட்டி இம்மாவட்டம் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், விழுப்புரம் மாவட்டம் இந்த கால கட்டத்தில் தொழில் துறை தற்போது வளரவில்லை.
சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை
தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தின் நிலையை உணர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில், திண்டிவனம் அருகே பெலாகுப்பம், கொள்ளார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு வரும் தொழிற்சாலைகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாறினாலும், இப்பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 52 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் ஒருவித வெறுமை நிலவும் சூழலில் இது சற்று நம்பிக்கையைத் தருகிறது.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், வெண்மணியாத்துார் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக இங்கு தொழிற்கூடங்கள் எதுவும் வரவில்லை. பெயருக்கு ஒன்றிரண்டு சிறு தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனால் எந்த ஒரு பெரிய வளர்ச்சியும் இல்லை. தற்போதுள்ள சூழலில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள், வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் நிலை தொடர்கிறது. போக்குவரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் மையமான ஒரு இடத்தில் விழுப்புரம் இருப்பதால் போக்குவரத்து வளர்ச்சி பெற்று இலகுவாக உள்ளது. உரிய திட்டமிடல்களுடன் தொழில் வளர்ச்சி பூங்காக்கள், ஐ.டி. பூங்காங்களை திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வந்தால் மேல்மருத்துவத்தூர் – திண்டிவனம் இடையே பரந்து கிடக்கும் வெற்றுப் பரப்பு வளம் கொழிக்கும் தொழிற்சார் சூழலாக மாறி விடும்.
மேலும் இது தொடர்பாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறுகையில்….
லோக்சபா பட்ஜெட் கூட்டத்தொடர் சம்பந்தமாக வணிகர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடத்தினேன். அப்போது, உளுந்தூா்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தொழில்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, நகைத் தொழிலாளா்களுக்கு கூலி நிர்ணயம், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு நலத் திட்டங்கள், வா்த்தகா்களுக்கு வங்கிக்கடன் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் எவையெல்லாம் மத்திய, மாநில அரசுகளின் வரம்புகளின் கீழ் வருகிறதோ, அவற்றை எல்லாம் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக ரவிக்குமார் எம்.பி. உறுதியளித்தார். இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில்பூங்கா அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 

மேலும் காண

Source link