Australia’s Health Minister Amber Jade Sanderson praised the existing medical infrastructure in Tamil Nadu as excellent


நேற்றைய தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆஸ்திரேலியா சுகாதார துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் பார்வையிட்டர். 
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “ மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை மேற்கு ஆஸ்திரேலியா மருத்துவத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் (Mr. Amber Jade Sanderson) (23.02.2024) சென்னை, ஓமந்தூரார், அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்து, அவர்கள் நாட்டில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன், அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு மிகவும் ஆச்சரிமூட்டும் விதத்தில் இருக்கிறது. இங்கு சிகிச்சை வரும் நோயாளிகளை மருத்துவர்கள் எந்த பாகுபாடுமின்றி அர்ப்பணிப்புடம் செயல்பட்டு வருகிறார்கள். இனி வரும் காலங்கள் இது போன்ற சந்திப்புகள் அதிகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதாரம் மற்றும் மனநலம் துறையின் அமைச்சர் ஆம்பர் ஜேட் சாண்டர்சன், மேலாண்மை இயக்குநர் ஜெகதிஷ் கிருஷ்ணன், , மேற்கு மருத்துவ குழு தலைவர் பாடி இராமநாதன், இந்தியா  மற்றும் வளைகுடா நாடுகளுக்கான முதலீடு மற்றும் வணிக ஆணையர் நஷித் சௌத்ரி, மற்றும் சுகாதாரக் குழுவினர்கள் சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையை சுற்றிப் பார்த்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு மிகத் தூய்மையான முறையில் அம்மருத்துவமனை பராமரிப்பது, அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்து என்னிடமும், நமது துறையின் செயலாளர் அவர்களையும் சந்தித்து மிக மகிழ்ச்சியினை தெரிவித்தார்கள். ஆஸ்திரேலியா குழுவினருடன் சுகாதார சேவைகளை பகிர்ந்து கொள்வதற்கும், நவீன சிகிச்சை முறைகள் குறித்து இரு தரப்பினரும் தெரிந்து கொள்வதற்கும் நல்ல கலந்துரையாடலாக அமைந்தது. 
தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாளை (25.02.2024) தமிழ்நாட்டில் பிரதமர் அவர்களால் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைப்பதற்கு ஏதுவாக சென்னை, கிண்டி, தேசிய முதியோர் நல மையம் திறந்து வைக்கப்பட உள்ளது. தேசிய முதியோர் நல மையங்கள் இந்தியாவில் 2 இடங்களில் அமையும் என்று 2014 இல் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாடு அரசு 9 ஏக்கர் நிலத்தினை தந்து தேசிய முதியோர் நல மையம் அமைவதற்கு காரணமாக இருந்தது.  இந்த மையம் கட்டிடம் முடிக்கப்பட்டு கடந்த காலங்களில் கோவிட் சிகிச்சை மையமாக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ச்சியாக அந்த மருத்துவமனையின் நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் முதியோர் நல மையமாக வரவேண்டும் என்கின்ற கோரிக்கையினை ஏற்று நாளை பிற்பகல் 4 மணிக்கு பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.
ஏற்கெனவே டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னாள் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு தளத்தில் முதியோருக்கான மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால் பிரத்யேகமாக ஒரு மூத்தோருக்கான மருத்துவமனை என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அதோடு தமிழ்நாட்டில் கட்டப்படவிருக்கின்ற 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் உளுந்தூர்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கட்டப்படவிருக்கிற அவசர சிகிச்சை பிரிவு (Critical Care Block) ஒவ்வொன்றும் ரூ.23.75 கோடி செலவில் கட்டப்படவுள்ளன. அக்கட்டிடத்திற்கான அடிக்கல்களையும் பிரதமர் நாட்ட உள்ளார். அக்கட்டிடங்கள் 60% ஒன்றிய அரசின் நிதி ஆதாரம், 40% தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரமாகவும் செயல்படுத்தப்படவுள்ளது.
அதேபோல் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ஆகிய பகுதிகளில் தலா ரூ.1.75 கோடி மதிப்பீடுகளில் (integrated public health lab) ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள்  கட்டும் பணிகளுக்கும் மாண்புமிகு பிரதமர் அவர்கள் அடிக்கல் நாட்டப்பட உள்ளார்கள். அதுவும்கூட 60% ஒன்றிய அரசின் நிதி ஆதாரம் மற்றும்  40% தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரமாகவும் கொண்டு கட்டப்படவுள்ளது. ICMR NIRT சார்பில் கூட்டு காசநோய் ஆராய்ச்சி மையம் ரூ.25 கோடியில் கட்டப்பட்டிருக்கிறது. அதனையும் மாண்புமிகு பிரதமர் அவர்கள் திறந்து வைக்கிறார். சென்னை ஆவடியில் ஆய்வக வசதிகளுடன் கூடிய நலவாழ்வு மையம் ரூ.7.08 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. அதனையும் மாண்புமிகு பிரதமர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு நுண்ணுயிரியல் பிரிவு தொடங்கப்படவிருக்கிறது. அதையும் மாண்புமிகு பிரதமர் அவர்கள் திறந்து வைக்கப்படவிருக்கிறார்கள். எனவே 10 பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டப்படவிருக்கிறார். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 4 மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்படவிருக்கிறது. ஆக மொத்தம் ரூ. 313.60 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் திறந்து வைக்கும் பணிகள் நாளை மறுநாள் (25.02.2024) நடைபெற உள்ளது. இதில் முதியோர்களுக்கான மருத்துவமனையில் முதல் பயனாளிகளுக்கான அனுமதி அட்டை நாங்கள் தரவிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link