Lok Sabha Election 2024 admk calls congress to make alliance over dmk


Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக ஒரு புறம், அதிமுக ஒருபுறம் என கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வர, மறுபுறம் பாஜகவும் தனது தலைமையில் புதிய கூட்டணியை கட்டமைத்து வருகிறது. இதனால், தேர்தல் நேரத்தில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி:
ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் பலதரப்பட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், கொங்குநாடு மக்கள் தேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உடனான கூட்டணி இறுதியாக, தொகுதி ஒதுக்கீடும் முடிவடைந்துள்ளது. அதேநேரம், திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு பெரிய கட்சி ஆன, காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. கடந்த தேர்தலில் கொடுத்ததை காட்டிலும், இம்முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்துவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு அதிமுக அழைப்பு:
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க் கொண்டு இருக்கிறது. சுமுகமான ஒன்றை எட்டிய பிறகு அறிவிப்பை வெளியிடுவோம். காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கும் கசப்பு வெளிப்பட்டுள்ளது. அந்த கசப்பிற்கான நல்ல மருந்து அதிமுகவிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும்.
பிரதமர் மோடி எம்ஜிஆர் குறித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். எம்ஜிஆர் குறித்துப் பேசி இருக்கிறார் என்றார் அது ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் உள்ளடக்கம் தான். எனவே, இதை நீங்கள் வரவேற்கவே செய்கிறோம்” என பதிலளித்தார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்தால் நேரடியாக இந்தியா கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு, “அது குறித்து எல்லாம் இன்னும் 2,3 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும். கூட்டணி குறித்து வெளிப்படையான பதிலை 2,3 நாட்களில் நிச்சயம் நாங்களே தருவோம். வரும் நாட்களில் எங்கள் பொதுச்செயலாளர் நல்ல செய்திகளை வரிசையாக அறிவிப்பார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வியூகங்களைத் திட்டமிட்டுள்ளோம்” என்று வைகை செல்வன் தெரிவித்தார். 

மேலும் காண

Source link