India’s biggest translocation project 16,000 corals get lifeline in Gujarat


Corals Translocation Project: குஜராத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்த 16,000 பவளப்பாறைகள் , 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Corals Translocation Project (பவளப் பாறைகள் இடமாற்றம்):
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் (MNP Marine National Park),  இந்தியாவின் மிகப்பெரிய இடமாற்றத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்,  16,000 பவளப்பாறைகள் , வண்ணமயமான கடல் உயிரினங்கள், மரணத்திலிருந்து வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளன. அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கடலுக்கு அடியில் (ஐஓசி) புதிய பைப்லைனை அமைத்ததால் இந்த பவளபாறைகள் இடமாற்றம் செய்ய வேண்டியதாயிற்று.  40 ஆண்டுகள் பழமையான அதன் தேய்ந்து போன பைப்லைனை மாற்ற வேண்டியதன் காரணமாக, இந்த பவள பாறைகளின் தொகுப்பு அழிவின் அபாயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டம் தொடங்கியது எப்போது?
அழிந்து வரும் இந்த உயிரினங்களை நுட்பமாக கையாள வேண்டிய திட்டம் ஜூலை 2021ம் ஆண்டில்,  குஜராத் வனத்துறையால் இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிபுணர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.  பவளப்பாறைகள் நீருக்கடியில் சுற்றுச்சூழலை அழிவதிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் அவை பொழுதுபோக்கு நடவடிக்கைகளை உருவாக்குவதால் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன.  IOCL இன் பழைய பைப்லைனின் ஆயுட்காலம் முடிவடைய இருந்ததால்,  புதிய குழாய் பதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த உயிரினங்களை சேதப்படுத்தாமல் மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் இருந்து பவளப் பாறை தொகுப்பை இடமாற்றம் செய்வதற்கான அனுமதியை அந்நிறுவனம் பெற்றது.
சவால்களும், சாதனையும்:
கடல் தேசிய பூங்காவின் தலைமை வனப் பாதுகாவலர் செந்தில் குமரன் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசுகையில், “எங்களுக்கு முன் உள்ள பிரச்னை பாதுகாப்பு, அதன் வளர்ச்சி மற்றும் பவளப்பாறைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எவ்வாறு தணிப்பது என்பதுதான். கடந்த காலத்தில் சிறிய அளவில் பவளப்பாறைகளை இடமாற்றம் செய்தோம், ஆனால் இதுதான் இந்திய வரலாற்றில் பவளப் பாறைகளின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான இடமாற்றம். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட ZSI இன் பத்து நிபுணர்கள் ஒன்றரை வருடங்கள் இந்த இடமாற்ற பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பவளப்பாறைகள் நாராராவில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த உயிரினங்களுக்கு ஏற்ற தளத்திற்கு மாற்றப்பட்டன” என செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.
பவளப்பாறைகள் பாதுகப்பாக உள்ளனவா?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் இரண்டு வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. ஒன்று ஆழமான நீரில் செழித்து வளரும் சப்டிடல் பவளப்பாறைகள் மற்றும் இரண்டாவது மேற்பரப்பில் காணப்படும் இடைநிலை பவளப்பாறைகள். இவை ஸ்நோர்கெல்லிங் மற்றும் ஸ்கூபா டைவிங் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டன. “இதை வெற்றிகரமான இடமாற்றம் என்று அழைக்கிறோம், ஏனென்றால் அவற்றின் உயிர் பிழைப்பு விகிதம் 90% க்கும் அதிகமாக உள்ளது. இது ஐந்தாண்டு திட்டமாகும்.  மேலும் பவளப் பாறைகள் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு ஏதேனும் நோய்கள் அல்லது பாசிகளை உருவாக்குகின்றனவா,  என தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் அவற்றின் தொடர்ச்சியான ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யப்படும்” என செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link