Union Education Minister Dharmendra Pradhan says class 10 12 exams will be held twice a year from 2025


பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை (NCF) மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. அதன்படி, பொதுத் தேர்வுகள் நடத்தும் முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு மாநில பாடத்திட்டங்களின் கீழ் படித்து வரும் மாணவர்களுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு:
அதன்படி, ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 
இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், எதில் நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறார்களோ அதை இறுதி மதிப்பெண்ணாக வைத்து கொள்ளும் ஆப்சனும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை எப்போதிலிருந்து அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
மத்திய அரசின் புதிய அறிவிப்பு:
இந்த நிலையில், வரும் 2025-26 கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை (Prime Minister Schools for Rising India) தொடங்கி வைத்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர், “2020 இல் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) நோக்கங்களில் ஒன்று மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைப்பதாகும். 2025-26 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிலிருந்து, மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இருமுறை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.
இந்த முடிவு உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதா என நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய மத்திய கல்வித்துறை அமைச்சர், “இரண்டு பொதுத் தேர்வுகளில் கலந்து கொண்ட பிறகு, எதில் நல்ல மதிப்பெண்களை பெறுகிறீர்களோ அதை இறுதி மதிப்பெண்ணாக வைத்து கொள்ளுங்கள்.
புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களை மன அழுத்தமில்லாமல் வைத்திருப்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை தரமான கல்வியை வழங்குவது, மாணவர்களை கலாச்சாரத்துடன் இணைத்து அவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பார்முலா இதுதான்” என்றார். கல்விக்கு காங்கிரஸ் அரசு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: Supreme Court : பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பத்தி பேசுறீங்க.. அதை இங்க காட்டுங்க.. மத்திய அரசை கேள்விகேட்ட உச்சநீதிமன்றம்

மேலும் காண

Source link