Pakistan Election Results 2024 Not a Single PM Completed Full Term In Office Since 1947


பாகிஸ்தான் நாட்டில் இதுவரை எந்த பிரதமரும் தங்களது பதவி காலத்தை நிறைவு செய்ததில்லை என்ற சோகமான வரலாறு தொடர்ந்து வருகிறது. அதனைப் பற்றி காணலாம். 
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. 1956 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே ஆசிய கண்டத்தில் இருக்கும் பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு நடந்த நேற்று சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் ஜெயிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
பிரதமர்கள் வரலாறு 
இதனிடையே 75 ஆண்டுகால பாகிஸ்தான் வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் இதுவரை தங்களது 5 ஆண்டு கால பதவியை  முடித்ததில்லை. இதில் ஆட்சி செய்தவர்களில் 3 பிரதமர்கள் மட்டுமே 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். மொத்தம் 29 பேர் பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் ஊழல் குற்றச்சாட்டு, கட்டாய ராஜினாமா, ராணுவ ஆட்சி, உட்கட்சி மோதல் மற்றும் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் அப்பதவியில் நீடிக்க முடியாமல் போய்விட்டது. 
கடைசியாக 2013 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை நவாஸ் ஷெரீப் பதவி வகித்தார். இதனையடுத்து 2017ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஷாஹித் காகன் அப்பாசியும் ஆட்சியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து  2018 ஆம் ஆண்டு இம்ரான் கான் ராணுவத்தின் ஆதரவுடன் பிரதமரானார். ஆனால் 4 ஆண்டுகளிலேயே அவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. 
திறமையற்ற நிர்வாக தன்மையால் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. இதனால் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் வாக்கெடுப்பின் மூலம் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் இம்ரான் கான் என்பது மோசமான பதிவாக அமைந்தது. 

மேலும் காண

Source link