உதயநிதி ஸ்டாலின் முக்கிய பொறுப்பில் உள்ளதால் ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை, வியாசர்பாடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்மலா சீதாராமன் பேசியது அநாகரீகமாக தனக்கு தெரியவில்லை என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்குதான் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்த பிரேமலதா, வாயை விட்டு வார்த்தை வந்துவிட்டால் அது நமக்கு எஜமான் ஆகிவிடும் என்றும் உதயநிதி வயதிற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தை அனைவரும் கண்டிக்கும் நிலையில்தான் உள்ளது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்தும் கலைஞர் பேரில் தான் இருக்கிறது என்ற அவர், ஆனால் எல்லாம் மக்கள் வரிப்பணம், அதனால் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார்.