தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கமே சிவகார்த்திகேயன், தனுஷ் என ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இறுதிக்குள் கமல், விஜய், விக்ரம், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா என பல நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அதனால் இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஏறுமுகமாக இருக்கும் என்பது தெரிகிறது.
பிளாக் பஸ்டர் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடிகர் நடிகைகளின் சம்பளமும் எகிறி வருகிறது. அந்த வகையில் நடிகர்களுக்கு நிகராக நடிகைகளும் கோடிகளில் புரள்கிறார்கள். அப்படி டாப் லெவலில் சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகைகள் யார் யார் என்றும் அவர்கள் எவ்வளவு தொகை சம்பளமாக வாங்குகிறார்கள் என்பது குறித்தும் ஒரு சிறு தொகுப்பு.
ராஷ்மிகா மந்தனா :
தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது 27 வயதாகும் இவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ஒரு படத்திற்கு 3 கோடியும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க 4 கோடியும் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. மேலும் அதிக அளவிலான படங்களில் நடித்து வரும் நடிகையாகவும் வலம் வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி :
ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இடையில் அவர் நடிப்பதில் இருந்து விலகி தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் ஒரு படத்தில் நடிக்க 6 கோடியை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
சமந்தா:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் சமந்தா மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட மயோசிட்டிஸ் பாதிப்பு காரணமாக அதற்கு சிகிச்சை பெற்று வந்த காரணத்தினால் பல படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ள சமந்தா நிச்சயம் மீண்டும் டாப் இடத்தை பிடிப்பார் என்பது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. சமந்தா ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே :
தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதை தொடந்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க அவர் சம்பளமாக 5 கோடி வரை பெறுகிறார் என கூறப்படுகிறது.
ஸ்ரீநிதி ஷெட்டி :
கே.ஜி.எஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. அதன் மூலம் ஏராளமான தென்னிந்திய ரசிகர்களை பெற்றார். தமிழில் விக்ரம் ஜோடியாக ‘கோப்ரா’ படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு சுமார் 7 கோடி வரை சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது.
நயன்தாரா :
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா இதுவரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரின் படங்கள் பெரிய அளவு வெற்றி பெற தவறியதால் அவரின் சம்பளமும் சரிந்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். பாலிவுட்டில் அதிக அளவிலான பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது. ஜவான் படத்திற்காக 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
திரிஷா :
பொன்னியின் செல்வன், லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் அஜித், கமல் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் திரிஷா 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளமாக பெற்று முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் காண