பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர்அன்புமணி ராமதாஸ் மீது கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
பாமகவின் மூத்த தலைவரும், மருத்துவர் ராமதாசின் நெருங்கிய நண்பருமான இசக்கி படையாட்சி கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பாமகவுக்கு பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது.
தென்காசியை சேர்ந்த இசக்கி படையாட்சி, தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தவும், மருத்துவர் ராமதாசின் கொள்கைகளை தென் மாவட்டங்களில் பரப்புவதற்கும் முக்கியமானவராக பார்க்கப்பட்டவர். தென் மாவட்டங்களில் பாமகவினர் இல்லை, வன்னியர்கள் இல்லை என்று பலர் கூறும் போது, இசக்கி படையாட்சி சிறப்பாக செயல்பட்டு பல்வேறு தரப்பினரால் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.
உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்தது, தனக்கு பேரிடியாகவும், பேரிழப்பாகவும் இருந்ததாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், இசக்கி படையாட்சியின் இறுதிச் சடங்கில் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இசக்கி படையாட்சியின் இறுதிச் சடங்கில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, உட்பட பல்வேறு மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஆனால், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசோ, தலைவர் அன்புமணி ராமதாசோ, இசக்கி படையாட்சியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இது பாமகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகும், அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூற யாரும் செல்லாதது, கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை குறிப்பிட்டு முகநூல் பக்கத்தில் எழுதி வரும் பாமகவினர், இசக்கி படையாட்சியின் ஆன்மா மன்னிக்காது என பதிவிட்டு வருகின்றனர். அதற்கு, பலர் சிவகாசியை சேர்ந்த முக்கிய நிர்வாகிக்கு எதாவது ஒன்று என்றால் சென்றிருப்பார்கள், இசக்கி படையாட்சிக்கெல்லாம் அவர்கள் செல்ல மாட்டார்கள் என்று கமென்டில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசோ, அன்புமணி ராமதாசோ திடீரென அங்கு சென்றால், அதிகமான கட்சியினர் கூடுவார்கள், அப்பகுதி மக்களுக்கு தொந்தரவாக இருக்கும், ஏராளமானோர் ஒரே இடத்தில் திடீரென கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் நேரில் செல்லவில்லை என்றும், காவல்துறையிடம் அனுமதி பெற்று, அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் சென்று, இசக்கி படையாட்சி குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்றும் காத்திருப்பதாக தலைமையில் உள்ள நிர்வாகிகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, காரைக்காலில் பாமக மாவட்டச் செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்ட போதும், இதே போன்று யாரும் செல்லவில்லை என்று பாமகவினர் கொந்தளித்தனர். ஆனால், அப்போது அன்புமணி ராமதாஸ் சென்றிருந்தால், மதுக்கடைகளை மூட வைத்ததற்காக தேவமணியை படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதால், காரைக்காலில் ஒரு மதுக்கடை கூட இருந்திருக்காது, அனைத்தும் சூறையாடப்பட்டிருக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும், அதையெல்லாம் பாமக தலைமை தவிர்த்துள்ளது என்று காவல்துறை தரப்பிலேயே பலர் கூறினர்.
இந்த காரணங்களை தேவமணியின் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு, தேவமணியைப் போன்றே பாமகவில் தொடர்ந்து பயணித்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். இதே போன்று இசக்கி படையாட்சி இறப்பு விவகாரத்திலும், தொண்டர்களின் கோவம், அதிருப்தி நியாயமானதாகவே இருந்தாலும், மற்ற பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று பாமக தலைமை செயல்பட்டு வருவதை இசக்கி படையாட்சி குடும்பத்தினர் எப்படி புரிந்துகொண்டுள்ளனரோ, அதுபோல் கட்சியினரும் புரிந்துகொள்வார்கள் என்று முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.