Pakistan: நெருங்கும் பொது தேர்தல்.. பாகிஸ்தான் சுயேட்சை வேட்பாளர் சுட்டுக்கொலை..

பாகிஸ்தானில் இன்னும் ஒரு வார காலத்தில் அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜூர் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சூட்டத்தில் உயிரிழந்தார்.

பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய சுயேட்சை வேட்பாளர் ரெஹான் ஜெப் கான் மற்றும் நான்கு உதவியாளர்கள் பஜூர் மாவட்டத்தில் மர்ம நபர்களால் சுடப்பட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை வேட்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உதவியாளர்கள் 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வு,  கடும்  பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தோஷ்கானா வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகள் பொது பதவியில் இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். இருப்பினும் பலரும் இம்ரான் கான் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இம்ரான் கட்சி தலைவர் அதிஃப் கான் கூறுகையில், ரெஹான் ஜெப் கான் கட்சி உறுப்பினராக இருந்தாலும், அவர் கட்சி சார்பில் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உதவியாளர்களின் கைது நடவடிக்கை உட்பட, இராணுவ ஆதரவு அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் அரசியலில் பல ஆண்டுகளாக அதிகாரத்தை வைத்திருந்த இராணுவம், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.  பொது தேர்தல் நெருங்கும் நிலையில் வேட்பாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எல்லை பகுதியின் இருபுறத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளனர். எனினும், தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.

Source link