Vijayakanth: இயக்குநர் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி மறைந்தார். அவரது உடல் டிசம்பர் 29ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற திரை பிரபலங்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிலையில், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் விஜயகாந்திற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிதாலயா வி.பாபு ஒருங்கிணைப்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர்கள் பூவிலங்கு மோகன், தாசரதி, ஜெயந்த், எடிட்டர் ராஜா, மற்றும் ஒளிப்பதிவாளர்கள், கண்ணப்பன், அன்பு ராஜ், ஆர்.ஆர்.ராஜ்குமார், ராஜு வர்கிஸ், முத்துராஜ், ராஜ்குமார், பிரதாப் மற்றும் தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் சங்கமும், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கமும், சின்னத்திரை சிறப்பு சப்தம் மற்றும் ஒலிப் பொறியாளர்கள் சங்கமும், தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடன கலைஞர்கள் சங்கமும், ஒப்பனை கலைஞர்கள் சங்கம் என அனைத்து சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இணைந்து, தே.மு.தி.க. அலுவலகத்தில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக விஜயகாந்த் நினைவிடத்தில் திரைப்பிரபலங்களான ஆதி, நிக்கி கல்ராணி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீநாத், எஸ்.ஏ.சந்திரசேகர், கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன், குக்வித் கோமாளி புகழ், சென்ராயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை பிரேமலதா விஜயகாந்த் தனது இரு மகன்களுடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இரு மகன்கள் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வருகை தந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விஜயகாந்த் இறந்ததில் அவரது நினைவிடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
]]>