Actor prashanth birthday know his cinema journey success failure will he stage comeback through vijay GOAT movie


தமிழ் திரையுலகில் இன்று  கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக திகழ்பவர்கள் நடிகர்கள் அஜித்தும், விஜய்யும். இவர்கள் இருவருக்கும் லட்சக்கணக்கான ஆண் ரசிகர்களும், பெண் ரசிகைகளும் உள்ளனர். இவர்கள் வளர்ந்து வந்த காலத்தில் இவர்கள் இருவரை காட்டிலும் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவரும், மிகப்பெரிய ரசிகைககள் பட்டாளத்தையும் கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த்(Actor Prashanth).
சாக்லேட் பாய் பிரசாந்த்:
வெற்றி மேல் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி நடிகராகவும், சாக்லேட் பாய், லவ்லி பாய் என்று பெண் ரசிகைகளால் வர்ணிக்கப்பட்ட ஆணழகனாக உலா வந்தவர் நடிகர் பிரசாந்த். பிரசாந்தின் தந்தை பிரபல தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான தியாகராஜன் ஆவார்.
1963ம் ஆண்டு பிறந்த பிரசாந்த் தன்னுடைய 17 வயதிலேயே வைகாசி பொறந்தாச்சு என்ற படம் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமானார். இளம் பாலகனாக பிரசாந்த் அறிமுகமான அந்த படத்தில் இடம்பெற்ற சின்ன பொண்ணுதான், நீல குயிலே, தண்ணி குடம் எடுத்து, ஆத்தா உன் கோயிலிலே பாடல்கள் எவர்கிரீனாக மெகா ஹிட் ஆனவை. நடிகர் கார்த்திக் நடித்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நடிகராக பிரசாந்த் தமிழ் திரையுலகில் தனது கால்தடத்தை அடியெடுத்து வைத்தார்.
ஆணழகன்:
அவர் நடித்த செம்பருத்தி படமும் பெரும் வெற்றியைப் பெற்றுத்தர, ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறினார். தன்னுடைய 6வது படத்திலே மணிரத்னம் படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் அந்த தோல்வி பிரசாந்தின் திரை வாழ்க்கையில் எந்த சறுக்கலையும் ஏற்படுத்தவில்லை.
அடுத்தடுத்து கலவையான வெற்றிப்படங்களை கொடுத்து வந்த பிரசாந்திற்கு 1995ம் ஆண்டு வெளியான ஆணழகன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. அந்த படத்தில் பெண் வேடமிட்டு நடித்த பிரசாந்தின் கதாபாத்திரம் அன்றைய காலத்தில் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவில் மிகவும் அழகாக இருந்ததாக ரசிகர்களால் புகழப்பட்டது. படத்தின் பெயருக்கு ஏற்பவே அந்த படத்திலும் பிரசாந்தை மிகவும் அழகாக காட்டியிருப்பார்கள்.
உச்சத்திற்கு கொண்டு சென்ற ஜீன்ஸ்:
இன்று லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய்யும், அஜித்தும் அப்போதுதான் தங்களது திரை வாழ்க்கையில் வளர்ந்து வந்து கொண்டிருந்த தருணம். ஆனால், அப்போதே பிரசாந்த் தனது திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார். அஜித் இரண்டாவது நாயகனாக நடிக்க கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த் பிரதான ஹீரோவாக நடித்தார்.
வெற்றி நாயகனாக உலா வந்து கொண்டிருந்த பிரசாந்தின் திரை வாழ்க்கையை மிகப்பெரிய கலங்கரை விளக்கமாக அமைந்தது 1998ம் ஆண்டு என்று கூறலாம். பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் இயக்கத்தில் உலக அழகி என்று அன்றைய இளைஞர்களால் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்த பிரசாந்த் கதாநாயகனாக நடித்த ஜீன்ஸ் திரைப்படம் அந்தாண்டு தான் வெளியானது.
இரட்டை சகோதரர்களும் அவர்களின் காதல் உணர்வுகளும் என காதல் படமான ஜீன்ஸ் படத்தை காமெடி, காதல் என கொடுத்து தமிழ்நாடு முழுவதும் மெகா ஹிட்டாக்கியிருப்பார் ஷங்கர். குறிப்பாக, அந்த படத்தில் ஏழு அதிசயங்களும் இடம்பெறும் வகையில் இடம்பெற்ற பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாடல் இன்றும் இளைஞர்களின் காதல் கீதங்களில் ஒன்றாகும். ஜீன்ஸ் படத்திற்கு பிறகு காதல் நாயகனாகவே பிரசாந்த் பலரால் பார்க்கப்பட்டார்.
கைகொடுத்த காதல், சறுக்கிய ஆக்‌ஷன்
அதற்கு ஏற்றாற்போலவே அவர் அடுத்தடுத்து நடித்த கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம், ஜோடி, ஆசையில் ஒரு கடிதம், பார்த்தேன் ரசித்தேன், பிரியாத வரம் வேண்டும், சாகலேட், மஜ்னு என்று தொடர்ந்து காதல் படங்களாக நடித்து காதல் நாயகனாக தன்னுடைய கேரியரில் வெற்றி கொடி நாட்டி வந்தார்.
அவருடைய சக போட்டி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தும் காதல், ஆக்ஷன் என கலவையான திரைப்படங்களை நடித்து தங்களுக்கென ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதன்பின்பும், காதல் படங்களில் நடித்தால் மட்டும் நீடித்திருக்க முடியாத என்பதை உணர்ந்த பிரசாந்த் தனது ரூட்டை ஆக்‌ஷன் பக்கம் மாற்றினார்.
வின்னர் படம் அளித்த வெற்றியளவிற்கு அடுத்தடுத்து அவர் நடித்த ஆக்‌ஷன் படங்கள் பெரியளவில் வெற்றியைத் தரவில்லை. ஆயுதம், லண்டன், ஜாம்பவான் என அவர் எடுத்த ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்த தருணத்தில் விஜய்யும், அஜித்தும் தங்களை மிகப்பெரிய ஆக்‌ஷன் ஸ்டார்களாக வளர்த்துக் கொண்டதால் விஜய், அஜித்தை விட அதிக ரசிகர்களையும், அதிக வசூலையும் வாரிக்கொடுத்த பிரசாந்த் பின்னோக்கிச் செல்லத் தொடங்கினர்.
தொடர் தோல்வி:
மேலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவி கிரகலட்சுமியுடனான பிரச்சினை, அவருடனான விவகாரத்து அவருடைய வாழ்க்கையை பெரியளவில் பாதித்தது. இது அவரது திரை வாழ்க்கையையும் பெரியளவில் பாதித்தது. அவர் மிகவும் எதிர்பார்த்த தகப்பன்சாமி திரைப்படமும், பொன்னர் சங்கர் படமும் காலை வாரியது.
தனது தந்தை தியாகராஜன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் படத்தை அவரது தந்தை இயக்கி பிரசாந்தே நாயகனாக நடித்து மம்பட்டியான் என்ற பெயரிலே ரீமேக் செய்தனர். ஆனால், அந்த படமும் அவருக்கு தோல்வியையே தந்தது.
நாயகன் பிம்பங்கள் உடைந்து ரசிகர்கள் வில்லன்களை மிகவும் ஆர்வமாக ரசிக்கத் தொடங்கிய காலத்தில், பிரசாந்திற்கு ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தான் நாயகனாகவே நடிப்பேன் என்று அவர் அடம்பிடித்ததால் அவருக்கு பதிலாக அந்த படத்தில் அரவிந்த்சாமி நடித்தார். அந்த படமே தனி ஒருவன்.
மீண்டு வருவாரா?
தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யுவாக நடிக்க முதன் முதலில் நடிக்க பிரசாந்தையே இயக்குனர் ராஜா அணுகினார். ஆனால், தனது நாயக பிம்பத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத பிரசாந்த் தெலுங்கு படத்தில் ராம்சரணுக்கு ஒரு சாதாரண அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து அவரது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தார்.
தற்போது, அவர் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய்யுடன் இணைந்து கோட்(GOAT) படத்தில் விஜய்க்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யுடன் அந்த படத்தில் பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்தாலும் பிரசாந்த் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஏனென்றால், விஜய்க்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த ஒரு நடிகராக உலா வந்த பிரசாந்த் இந்த படம் மூலமாக மீண்டும் கோலிவுட்டில் தனது கம்பேக்கைத் தருவாரா? என்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணம்.
கோலிவுட் மீண்டும் தனக்கு சிவப்பு கம்பள வரவேற்பைத் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கும் பிரசாந்திற்கு இன்று 51வது பிறந்த நாள். தமிழ் திரையுலகில் மீண்டும் மிகப்பெரிய வெற்றி நாயகனாக உலா வர பிரசாந்திற்கு வாழ்த்துகள்.
 

Source link