Parliament Election 2024 Seat Allocation: How Many Seats Will Congress Get? Discussion With DMK Today | DMK

DMK – Congress Alliance: திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2024:
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.  மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல், இம்முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என, I.N.D.I.A. கூட்டணியின் மூலம் காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை  முடுக்கிவிட்டுள்ளன.  குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தரப்பில், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்காக 3 குழுக்களை அமைத்துள்ளது. 
திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை:
இந்நிலையில் தான் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டிற்கான, முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பிற்பகல் 3 மணி அளவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுக தரப்பில் டி.ஆர் பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதேநேரம், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தரப்பில், அக்கட்சியின் மாநில மேலிட பொறுப்பாளர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.
காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்?
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த தேர்தலில் 15 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் தான் இன்றைய பேச்சுவார்த்தையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், மீண்டும் 38 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என முனைப்பு காட்டுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் அதிக கவனம் செலுத்தி, வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திமுக ஆர்வம் காட்டுகிறது. கடும் போட்டி உள்ள தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்துணர்ச்சி பெறுமா I.N.D.I.A. கூட்டணி?
பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள 28 எதிர்க்கட்சிகள் இணைந்து, I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கின. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பட்ட கருத்துகள் காரணமாக, திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பஞ்சாபில் தனித்து போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவிக்க, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாஜக பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படும் என அகிலேஷ் யாதவ் அறிவித்து கூட்டணிக்கு நம்பிக்கை தந்துள்ளார். இந்நிலையில் தான், இன்று திமுக உடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

Source link