CMs Arrest: இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலா? ஜெயலலிதாவா?

சுதந்திர இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவங்கள் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர்:

கடந்த ஜனவரி 31ஆம் தேதி, சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை முற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

இந்த சம்பவம் நடந்து இரண்டே மாதங்களில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஹேமந்த் சோரன் போல் அல்லாமல், முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவில்லை.

இதனால், சுதந்திர இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சராகியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்கு முன்பு பல முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்வதற்கு முன்பே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

ஜெயலலிதா:

இந்திய வரலாற்றில் கைதான முதல் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாதான். கடந்த 1996ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது, அப்போது அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

கிராம மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில் 1996 டிசம்பர் 7ஆம் தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்ற முதல் முதலமைச்சர் என்ற பெருமையும் ஜெயலலிதாவையே சாரும். கடந்த 2014இல் பெங்களூரு நீதிமன்றத்தால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால், எம்.எல்.ஏ.வாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தண்டனையை அடுத்து முதலமைச்சர் பதவியை இழந்தார்.

கருணாநிதி:

திமுக ஆட்சியை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு, கடந்த 2001ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் அப்போதைய திமுக தலைவரும், முன்னாள் முதலமைசச்சருமான மு. கருணாநிதியை தமிழ்நாடு போலீஸார் கைது செய்தனர்.

அப்போது, மத்தியில் வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்த முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் அரசு ஊழியர்களின் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டனர். சுதந்திர இந்திய வரலாற்றில், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை.

லாலு பிரசாத் யாதவ்:

கடந்த 1997 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 25ஆம் தேதி, பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவரது மனைவி ரப்ரி தேவி முதலமைச்சரானார்.

சுமார் நான்கு மாதங்கள் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகும், அவர் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிபு சோரன்:

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன். கடந்த 2006ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது, சிறை சென்றார் சிபு சோரன்.

தனது தனிச் செயலர் சஷிநாத் ஜாவைக் கடத்தி கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த பிறகு, அவர் சிறை சென்றார்.

எடியூரப்பா:

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவுக்கு எதிராக லோக்ஆயுக்தா நீதிமன்றம் இரண்டு ஊழல் வழக்குகளில் கைது வாரண்ட் பிறப்பித்த சில மணிநேரங்களிலேயே கடந்த 2011ஆம் ஆண்டு, அக்டோபர் 15 ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.

Source link