Kumbakonam To Be Announced As New District Seperated From Thanjavur – TNN | Thanjavur District: அறிவிப்பு வருமா? வழக்கம் போல் கானல் நீராகுமா?

தஞ்சாவூர்: இப்போவா… அப்போவா என்று எதிர்பார்ப்புடன் காலத்தை நகர்த்தி வந்த மக்களுக்கு இந்த குடியரசு தினத்தில் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது பாராளுமன்ற தேர்தலுக்குள் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர். யார் அந்த மக்கள்? என்ன எதிர்பார்ப்பு என்று தெரியுங்களா?
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் ஏராளமான பிரபலமான கோயில்கள் உள்ளன. கும்பகோணத்தை சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், புராதன கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள் உள்ளன.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் இங்குதான் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படி ஆன்மீக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 

இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணத்திற்கு மற்றொரு பெருமை என்றால் அது வெற்றிலைதான். மனசும், நாக்கும் மணக்கும் வெற்றிலை என்றால் அது கும்பகோணம் வெற்றிலைதான் என்பார்கள். கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டுக்கு பெயர் பெற்றது, நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு, பூஜை உலக புகழ் பெற்றது. இவைகளை வாங்குவதற்காகவும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள். இப்படி அனைத்து விதத்திலும் மாவட்டம் ஆக தகுதியிருக்கு? ஆனால் ஆகலையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தனர் கும்பகோணம் மக்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தை பிரித்து தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கடந்த  பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். புயல் காற்றில் அடித்துச் செல்லப்படும் காய்ந்த இலை போல் கோரிக்கைகள் கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகின்றன.
மக்களும் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்ற எண்ணத்தில் கும்பகோணம் பகுதிக்கு வரக்கூடிய அனைத்து அரசியல் முக்கிய பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆகுது கும்பகோணம்… தனி மாவட்டமாக… அறிவிப்பு விரைவில் என்று உலா வரும் செய்திகள் மக்கள் மத்தியில் வைரலாக பரவி கொண்டே இருக்கின்றன.
இது வதந்தியா இல்லை? உண்மை அறிவிப்பா என்று மக்கள் பெரும் குழப்பில் தவித்து வருகின்றனர். அவ்வாறு அது உண்மை தகவலாக இருந்தால் கும்பகோணம் மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறும். இந்த தகவல்கள் அனைத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிறதே தவிர அரசு சார்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதுதான் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம். தேர்தல்கள் நெருங்கும் காலக்கட்டத்தில் எல்லாம் தஞ்சை மாவட்டம் 2 ஆக பிரித்து கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்பதுதான் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளாக இருக்கிறது. அதுக்கு பிறகு… பிறகுதான்…
இந்த நிலையில்  இந்த ஆண்டில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலாவது கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கும்பகோணம் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் வர்த்தக  மற்றும் வணிகர் சங்கத்தினர் கூறுகையில்,  கும்பகோணத்தை பொறுத்தவரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அலுவலகங்கள் மட்டும் தான் இல்லை. ஆனால் மற்ற  அனைத்து அரசு அலுவலகங்களும் இருக்கின்றன. கும்பகோணத்தில் தான் தமிழக அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகம் உள்ளது.   
அதே போல் தமிழகத்தில் உள்ள கோவில்களில் முக்கிய கோவில்கள் அனைத்து ராசிகாரர்களுக்கும் உள்ள கோவில்கள் என அனைத்தும் கும்பகோணத்தில் தான் உள்ளன. இவ்வாறு பல சிறப்புகளை கும்பகோணம் கொண்டிருந்தாலும் மாவட்டம் என்ற பெயரை பெற்றதாக இல்லை. ஆட்சிக்கு வரக்கூடிய எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும் அறிவிப்பை வெளியிடுகின்றனர். ஆனால் அதனை நிறைவேற்றுவதில்லை.
மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் கும்பகோணம் பகுதி பொருளாதாரம் மற்றும் கல்வியில் நல்ல வளர்ச்சியை சந்திக்கும். எனவே வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.
கும்பகோணத்தை பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை  நடத்தியுள்ளோம். ஒரு மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன. இருந்தாலும் மாவட்டம் மாவட்ட அறிவிப்பு என்பது எங்கள் கனவாக தான் இருக்கிறது. புதிய மாவட்ட அமைப்பு விதிகளின் படி வருவாய் பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் கும்பகோணத்தில் உள்ளது. எனவே நடப்பு பாராளுமன்ற தேர்தலையொட்டி கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும்  என்றனர்.
இதற்கிடையில் எங்கள் ஊராட்சிகளை கும்பகோணம் மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது என்று வலியுறுத்தி பல ஊராட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தஞ்சை கலெக்டரிடம் மனுவும் அளித்த நிகழ்வும் நடந்தது. வருமா அறிவிப்பு… கனவு நனவாகுமா? கானல் நீராகுமா… வழக்கம் போல் காத்திருக்கின்றனர் கும்பகோணம் மக்கள்.

Source link