தீயாய் வீசி இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 319 ரன்களில் ஆல் அவுட்..!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 153 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களும் எடுத்திருந்தனர். 
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, மூன்றாவது நாளில் தடுமாறி, இரண்டாவது செஷனிலேயே சரிந்தது. இங்கிலாந்து அணி 20 ரன்களுக்குள் கடைசி 5 விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
இதுவரை என்ன நடந்தது..?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த காலகட்டத்தில், கேப்டன் ரோஹித் சர்மா அணிக்காக 131 ரன்கள் எடுத்த மிகப்பெரிய ஸ்கோரராக ஜொலித்தார். இது தவிர ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்திருந்தார். 
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்து பேஸ்பால் பாணியில் விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 133 ரன்னிலும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாவது நாளில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றது.
மூன்றாம் நாளில் சீறிப்பாய்ந்த இந்திய பந்துவீச்சாளர்கள்:
இரண்டாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து ஆடிய விதத்தை பார்த்தால், 8 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில் மூன்றாவது நாளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று யூகிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மூன்றாவது நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் பிடியை இறுக்க இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஆல் அவுட் ஆனது. 
அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 18 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுக்க, அடுத்ததாக உள்ளே வந்த பேரிஸ்டோவும் ரன் ஏதுமின்றி குல்தீப் யாதவ் பந்தில் LBW முறையில் அவுட்டானார். மறுமுனையில் பென் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 
 20 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி: 
பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஸ்டோக்ஸ் விக்கெட்டை அடுத்து இங்கிலாந்து ஸ்கோர் 299/6 ஆக இருந்தது. பின்னர் ஒட்டுமொத்த அணியும் 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்ததாக உள்ளே வந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஃபாக்ஸ் (13), ரெஹான் அகமது (6), டாம் ஹார்ட்லி (9), ஜேம்ஸ் ஆண்டர்சன் (1) என 20 ரன்களுக்குள் மீதமுள்ள 5 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி 319 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. 

Source link